மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்

Contents:-
1. வேதனை கொண்ட எண்ணத்துடன் ஞானிகள் உணர்வை நெருங்க முடியாது – “வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் அருளை எடுக்க வேண்டும்
2. தீமையை நீக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதற்கு “விதி…” என்று எதுவும் இல்லை – யாராக இருந்தாலும் அதைப் பெறமுடியும்
3. ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு பயந்து வாழும் நிலை உலகமெங்கும் பரவிவிட்டது – மகரிஷிகள் காட்டிய வழியில் நாம் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும்
4. கடலில் எது கலந்தாலும் அதை உப்பு நீராக மாற்றுவது போல் “ஞானிகளின் ஒளிக்கடலில் நாம் கலந்து…” எல்லாவற்றையும் ஒளியாக்க வேண்டும்
5. உங்கள் நினைவாற்றல்…” ஞானிகளின் பால் இருந்தால் ஞானிகள் கண்டுணர்ந்த மெய்ப்பொருளை எளிதில் காண முடியும்
6. தீமைகளை விலக்கித் தள்ளும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள் – “நினைத்தவுடன் அந்தச் சக்திகள் உங்கள் முன் குவியும்”
7. மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் எப்படி இணைத்து இணைத்துக் கொடுக்கின்றோம்
8. இந்தத் தியானத்தின் மூலம் விண்ணிலிருக்கும் மெய்ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்”
9. “மேல் நோக்கிய சுவாசம்…” மிக மிக முக்கியமானது
10. “ஞானகுரு… உங்கள் உணர்வுக்குள் தான் இருக்கிறேன்” – பயன்படுத்திக் கொள்ளுங்கள்
11. “மகரிஷிகளின் உணர்வலைகள்” ஒளிக்கற்றைகளாக உங்களுக்குள் இணைவதைக் காண முடியும்
12. பிரபஞ்சம் உருவாகி முழுமை அடைந்து அதில் உருவான உயிர் விண் செல்லும் பக்குவம் – “அகஸ்தியன் கண்ட மெய் வழி”
13. “அகஸ்தியன் ரூபத்தையும்” அவர் கண்ட பேருண்மைகளையும் நீங்களும் காணலாம்
14. எல்லா மகரிஷிகளும் “27 நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்துத் தான்…” ஒளியின் சரீரம் பெற்றார்கள் – 27 நட்சத்திரத்தின் சக்தியை ஒன்றாக எடுப்பது முக்கியமானது
1. வேதனை கொண்ட எண்ணத்துடன் ஞானிகள் உணர்வை நெருங்க முடியாது – “வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் அருளை எடுக்க வேண்டும்
எனக்குக் (ஞானகுரு) கல்வி அறிவு இல்லை என்றாலும் அந்த மகா ஞானியின் உணர்வலைகளை குருநாதர் பதிவு செய்ததை நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நுகர்கின்றேன்.
அவ்வாறு நுகர்ந்தறிந்து என் உயிருக்குள் மோதச் செய்யும் போது அந்த ஞானியின் ஆற்றல்மிக்க உணர்வுகளே ஞானமாக என்னைப் பேசச் செய்வதும் இதை நீங்கள் நுகர்ந்தறியும் போது உங்களுக்குள்ளும் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
பதிவான உணர்வின் சக்தியை நாம் அனைவரும் ஒன்றாக எண்ணி ஏங்கி ஈர்க்கும் நிலைகள் வரும் போது காற்றிலே மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் கூடியுள்ள இப்பகுதிக்கு ஈர்க்கும் தன்மை வருகின்றது.
1.அந்த மகா ஞானிகள் பிறவி அற்ற நிலைகள் கொண்டு
2.எந்த மனிதன் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது
3.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள்.
4.இருள் சூழ்ந்த நிலைகளை மாய்த்திடும் சக்தி வாய்ந்தவர்கள்.
நம் வாழ்க்கையில் வரும் வேதனை கலந்த உணர்வு கொண்டு
1.வேனையான எண்ணத்துடன் நாம் கவர நினைத்தால்
2.அந்த ஞானியின் உணர்வலைகள் நஞ்சு கலந்த உணர்வின் அருகில் வராது
3.இதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.
4.ஞானியின் உணர்வைப் பெறும் தகுதியை இழந்துவிடுவோம்.
அந்த மாதிரி ஆகாதபடி ஞானியின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
நல்ல வினைகளாக ஞான வித்துக்களாக உங்களுக்குள் உருவாக்கும் வண்ணம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.
உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் குடும்பத்திலும் சரி தொழிலிலும் சரி பொறுப்பற்ற நிலைகளில் செயல்படுபவர்களை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுதெல்லாம் எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் வேதனைகளும் வருகின்றது.
அதைப் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்து நம் ஆறாவது அறிவைச் செயலற்றதாக்கும் தன்மையிலிருந்து நாம் நம்மை மீட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.பொறுப்புடன் செயல்படும் நல்ல உணர்வுக்குள்
2.பொறுப்பற்ற உணர்வுகள் கலந்து
3.பொறுப்பான உணர்வைத் தாழச் செய்துவிடுகின்றது.
4.அதிலிருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.
தங்கத்திலே திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் ஆவியாக மாற்றியது போல அந்த அருள் ஞானியின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்தும் போது நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்த தீய வினைகள அது செயலிழக்கச் செய்துவிடும்.
ஆகவே வாழ்க்கையில் வேதனை வேதனை என்று வேதனைகளையே எண்ணாதீர்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த வேதனையிலிருந்து விடுபடுவேன் என்று எண்ணி ஏங்கி எடுத்துப் பாருங்கள்.
அந்த அருள் சக்தி உங்களுக்குள் இணைந்த பின் “மன வலிமையும்… ஒரு புது உணர்ச்சியும்…” ஏற்படும். தொடர்ந்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க எடுக்க
1.வேதனைகள் அகன்று நல்ல சிந்தனைகள் தோன்றும்.
2.மனதில் அமைதியும் உற்சாகமும் ஏற்படும்.
2. தீமையை நீக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதற்கு “விதி…” என்று எதுவும் இல்லை – யாராக இருந்தாலும் அதைப் பெறமுடியும்
அன்றைய அரசனின் பேராசையால் வந்ததும் இன்றைய விஞ்ஞான அறிவால் வந்ததும் மெய் ஞானிகள் காட்டிய மெய் உணர்வுகளைத் துண்டு துண்டாக ஆக்கி
1.கண்ணை ஒருவனும்
2.உயிரை ஒருவனும்
3.உடலை ஒருவனும்
4.காந்தத்தை ஒருவனும்
5.மணத்தை ஒருவனும் இவ்வாறு தனது கடவுளாக மாற்றிக் கொண்டு
6.உண்மையின் தன்மையை தனக்குள் பிரித்து
7.யார் கடவுள்..? யார் தெய்வம்...? என்ற நிலைகளை நாம் அறிய முடியாது
8.தேடிக்கொண்டே இருக்கும் வழியில் மதங்களைக் காட்டிவிட்டு
9.மனித இனத்தையே அழித்து கொண்டிருக்கும் தீவிரவாதம் ஆகி
10.எதுவும் மிஞ்சாத நிலைக்கு இன்றைய உலக வந்துவிட்டது.
ஒரு குரங்குக் கதையைச் சொல்வார்கள்…!
அந்தக் குரங்குக் கதையில் ஒரு அப்பம் அதிகமாகிப் போயிவிட்டதால் அதை யாருக்குக் கொடுப்பது என்ற நிலையில் சமாதானம் ஆகவில்லை. அப்பொழுது இன்னொரு குரங்கு அங்கே வந்து எடுத்து…எடுத்து எடுத்து…எடுத்து அதைச் சாப்பிட
1.அப்பம் இதிலே குறைய…
2.அதிலே தூக்கத் தூக்க.. அதிலே குறைய இதிலே தூக்க,…
3.கடைசியில் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது…!
4.சமப்படுத்த முடியாமலே போய்விட்டது
மதங்கள் என்ற நிலை வரும் பொழுது மனிதனை மனிதன் அழித்துக் கொள்ளும் நிலை வரும் பொழுது எது ஓங்குகின்றதோ அது மற்றதை அழிக்கின்றது.
மதத்திற்குள் இனங்கள் பல பெருகி இனத்தின் தன்மை கொண்டு இன்று ஒன்றுக்கொன்று
1.மனித இனத்தையே கூண்டோடு அழிக்கும் உணர்வுகள்
2.மனிதனுக்குள் விளைந்து விளைந்து… வெளிப்படுத்தப்பட்ட அத்தகைய உணர்வுகள்
3.சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்று இந்தக் காற்று மண்டலமே
4.நஞ்சு கொண்ட “சாக்கடையாக” மாறிவிட்டது.
அதே சமயத்தில் இந்தச் சாக்கடைக்குள் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மெய் ஞானிகளின்
1.தீமைகளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய
2.அரும் பெரும் சக்திகளும் இங்கே நமக்கு முன் மறைந்திருக்கின்றது.
மறைந்த அந்த அருள் ஞானியின் உணர்வைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து இந்தச் சாக்கடையான உலகில் இந்தச் சாக்கடையான வாழ்க்கையைப் பிளந்து உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழும் அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெறமுடியும்.
இதற்கென்ற “விதி…” எதுவும் இல்லை….!
இளம் பிள்ளை என்றோ… முதுமையானவர்கள் என்றோ… அறிந்தவன் என்றோ… அறியாதவன் என்றோ… எதுவும் இல்லை…!
ஏனென்றால் அறியாதவன் அறிய முற்படுகிறான். அறியாத நிலைகள் இருக்கும் பொழுது தான் நாம் அறிய முற்படுகின்றோம்.
அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு மெய் ஞானத்தை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியின் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வுகளை உங்களில் விளைய வைக்க முடியும்.
உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
3. ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு பயந்து வாழும் நிலை உலகமெங்கும் பரவிவிட்டது – மகரிஷிகள் காட்டிய வழியில் நாம் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும்
ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்துவிட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில்
1.ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.
2.ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு நாம் ஆடாகப் பிறக்கின்றோம்.
இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.
இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம் இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.
1.இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை.
2.ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம்.
தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.
பாம்பு எப்படித் அதனை நாம் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்கு முன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.
1.தீமை செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர்
2.“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில்
3.சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால்
4.வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.
மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை இன்று வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.
அதிலிருந்து மீண்டிடும் நிலையாக குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அருள் ஞானிகள் கண்ட மெய் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைக் கவரும் நிலையாக
1.உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து
2.அந்தப் பேரருள் உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.
வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இன்றைய விஞ்ஞான உலகில் காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து நல்லதை நுகரப் பழக வேண்டும்.
சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.
3.நம்மை அறியாது வரும் இருளைப் போக்குவோம்.
4.மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.
அந்த மெய்ஞானிகளின் தொடர்பு கொண்டு முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம்.
முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.
ஏனென்றால் இதற்கு முன்
1.நமது முன்னோர்களை நாம் விண் செலுத்தத் தவறிவிட்டோம்.
2.இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.
அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
நாமும் விண்ணின் ஆற்றலைப் பெறும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே சென்றடையலாம். நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.
1.மரணமில்லாப் பெருவாழ்வு என்பதும்
2.பிறவியில்லா நிலை என்பதும்
3.பேரின்பப் பெருவாழ்வு என்பதும் அந்தச் சப்தரிஷி மண்டலமே.
ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் தன்மை பெறுவோம்.
4. கடலில் எது கலந்தாலும் அதை உப்பு நீராக மாற்றுவது போல் “ஞானிகளின் ஒளிக்கடலில் நாம் கலந்து…” எல்லாவற்றையும் ஒளியாக்க வேண்டும்
நெற் பயிரை வயலில் விளைய வைத்து அதைக் குவியலாக்கும்போது எல்லோரும் உணவாக உட்கொள்ள முடிகின்றது.
அதே போலத் தான் ஞானிகளின் உணர்வுகளைக் குவியலாகக் குவித்தால் தான் எல்லோரும் நாம் அவரவர்களுக்குத் தேவையான பங்கை எடுத்துக் கொள்ள முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானிகளின் ஞான வித்தை எனக்கு (ஞானகுரு) ஒரு நெல்லாகக் கொடுத்தார் குருநாதர்.
அதைப் பல நெல்லாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.
யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கேட்டுணர்ந்தவர்கள் எல்லாருடைய உணர்வுகளிலும் அந்த வித்தைப் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றோம்.
பதிய வைத்தை ஞானிகளின் உணர்வுகளை நாம் எல்லாம் சேர்த்து விளைய வைத்தால் தான் ஒரு குவியலாக வரும்.
ஏனென்றால் ஒரு நெல் யாருக்கும் பசியை தீர்க்காது. என் ஒருவனால் அது செய்ய முடியாது.
எல்லோரும் சேர்த்து ஞானிகளின் அருளாற்றல்களை விளைய வைத்துப் பெரிய குவியலாக வரப்படும் பொழுது தான் அதை மொத்தமாகப் போட்டுச் சமைத்து எல்லாருடைய பசியையும் தீர்க்க முடியும்.
இதைக் கேட்டுணர்ந்தவர்கள் அனைவரும் தீமையை நீக்கும் “கல்கி…” என்ற நிலையில் பத்தாவது நிலையான ஒளியின் சரீரம் பெறும் அந்த நிலையை அடைவீர்கள்.
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து
2.உங்கள் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு துன்ப நிலைகளிலிருந்தும்
3.உங்களை மீட்கச் செய்வதற்கே இந்த உபதேசம்.
4.மெய் ஒளியை வளர்த்து தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளுங்கள்.
இந்த மெய் உணர்வுகளைக் கேட்டு வளர்த்துக் கொண்டவர்கள் உங்கள் ஊர்களில் உள்ள மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி அவர்களையும் மீட்கச் செய்ய வேண்டும்.
ஞானிகளின் ஆற்றலைப் பெறும் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அவர்கள் அறியாது வந்த இருளை நீக்கும் நிலைகளை நாம் பெறச் செய்ய வேண்டும்.
நாம் வாழும் ஒவ்வொரு இடங்களிலும் ஞானிகளின் உணர்வுகளை நம் மூச்சலைகள் மூலமாக அதைப் படரச் செய்ய வேண்டும்.
அப்படிப் படர்ந்தால் தான் நச்சுத் தன்மைகளிலிருந்து மனிதன் ஒவ்வொரு மனிதரும் விடுபடும் நிலைகளைப் பெருகச் செய்ய முடியும்.
கடல் பெரிதாக இருக்கின்றது.
1.அதில் எது கலந்தாலும் கடைசியில் “உப்பு நீராக” மாற்றிவிடுகின்றது.
2.அதாவது நல்ல தண்ணீரோ அசுத்த நீரோ சாக்கடைத் தண்ணீரோ எதுவாக இருந்தாலும்
3.அந்தக் கடலுக்குள் சேர்ந்த பின் உப்பின் நிலைக்கே அதை மாற்றி விடுகின்றது.
இதை போல தான் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் அந்த மெய் உணர்வின் கடலிலே ஒளிக்கடலான அந்த ஞானிகளின் உணர்வுடன் தான் சங்கமமாக வேண்டும்.
1.வாழ்க்கையில் வரக்கூடிய அசுத்தங்களோ
2.தவறான நிலைகளைக் கேட்டுணரந்தாலோ
3.உலகில் எங்கெங்கோ நடக்கும் தவறுகளைக் கேட்டு நுகர்ந்தாலோ
4.அதைப் பார்த்தாலோ அதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலோ
5.இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் போய்
6.நம் உடல் என்ற பெரும் கடலுக்குள் உப்பாக மாற்றி
7.அதனின் (தீமையின்) செயலுக்கே நம்மை மாற்றிவிடுகிறது.
ஆனால் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நாம் அனைவரும் சேர்ந்து
1.மீண்டும் மீண்டும் குவியலாகக் கவரப்படும் பொழுது
2.நமக்குள் அது பெருகி நம்மை ஞானியாக மாற்றி
3.மெய் ஒளிக்குள் – மகரிஷிகளின் அருள் வட்டமான அந்த எல்லைக்குள் நம்மை அழைத்துச் சென்று விடும்.
4.அந்தப் பெரும் கடலான ஒளிக் கடலில் கலக்கும் நிலையை
5.நாம் இன்றிலிருந்தே இப்பொழுதிலிருந்தே செய்ய வேண்டும்.
இதைக் கேட்டுணர்ந்தவர்கள் உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி சொல்லுக்குள் இனிமை பெற்று மெய் ஒளி காணுங்கள்.
அதே போன்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தவர்கள் அவர்கள் இருள்கள் நீங்கி மெய் ஒளி காணும் சக்தியாக அவர்களுக்குள்ளும் விளையச் செய்ய வேண்டும்.
ஞானிகளின் உணர்வுகளை எல்லோருக்குள்ளும் விளைவிக்கும் திறன் நீங்கள் பெறவேண்டும் என்ற நிலைகளுக்குத்தான் இதைச் சொல்கிறோம்.
உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
5. உங்கள் நினைவாற்றல்…” ஞானிகளின் பால் இருந்தால் ஞானிகள் கண்டுணர்ந்த மெய்ப்பொருளை எளிதில் காண முடியும்
ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
1.புலனறிவுகள் ஐந்திலும்
2.கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி
3.உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.
நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.
இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.
அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.
அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.
அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.
ஆனால் வேறு பக்கம் எண்ண அலைகளைப் படரவிட்டு எண்ணிக் கொண்டிருந்தால் யாம் உபதேசிப்பதைக் கவராது உங்கள் ஈர்ப்பினுடைய நிலைகள் தடையாகும்.
உதாரணமாக பேசும் பொழுது மைக்கை (MIC) அந்தப் பக்கம் திருப்பி வைத்துவிட்டால் சப்தம் குறையும். அதைப் போல
1.மற்ற உணர்வின் நிலைகளை நமக்குள் நினைவுபடுத்தும் பொழுது
2.நமது உணர்வுகள் நாம் பேசும் உணர்வலைகள் ஒன்றுக்கொன்று மாறுபடப் போகும் பொழுது
3.”அரத்தங்கள்…” உங்களுக்குள் பதிவாகாது
4.இதைப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும் இதற்குப் பின் “ஞாபக சக்தியும்” வராது.
அதனால் அர்த்தமற்ற உணர்வின் நிலைகளாகிப் போய்விடும். நீங்கள் தியானமிருக்கும் பொழுது இதை எண்ணினாலும் அந்தச் சக்திகள் கிடைப்பதும் அரிதாகிவிடும்.
ஏனென்றால் காற்றிலிருப்பதைச் சமப்படுத்திய நிலைகள் கொண்டு, உங்களுக்குள் பதியச் செய்திருந்தால்தான் நீங்கள் இதை “இயக்க…” முடியும்.
யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.
அருள் ஞானிகள் தமக்குள் வளர்த்த அந்தச் சக்தி வாய்ந்த ஆற்றல்களை அந்த ஞான வித்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.
அந்த ஞான வித்து உங்களுக்குள் வளர்ந்தால் அந்த ஞானிகள் எதைச் செய்தார்களோ அதை நீங்களும் செய்வீர்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒவ்வொருவரும் தமக்குள் பெருக்கச் செய்ய வேண்டும். அதை உடலுக்குள் அணுக்களாக விளையச் செய்ய வேண்டும்.
விளைந்தால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உயிருடன் ஒன்றிய நிலையாக என்றுமே ஒளியின் சரீரம் பெறலாம்.
6. தீமைகளை விலக்கித் தள்ளும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள் – “நினைத்தவுடன் அந்தச் சக்திகள் உங்கள் முன் குவியும்”
ஒரு ரோஜாப்பூவின் மணம் அதிகமாக வீசும் இடத்தில் அதன் அருகில் இருக்கும் தீமை விளைவிக்கக்கூடிய ஒரு நஞ்சான செடியிருந்தாலும் அதனின் மணம் விலகிச் சென்றுவிடும்.
இதைப் போல நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வை அதிகமாகக் கூட்டும் பொழுது நமக்குள் வந்து சேரும் நல்ல குணங்களை விலக்கித் தள்ளிவிட்டுத் தீமையின் உணர்வையே செய்து தீமையின் உடலாகவே நம்மை மாற்றிவிடும்.
1.ஒரு தாவர இனத்தின் “மணம்”
2.இன்னொரு தாவர இனத்தின் மணத்தை “விலக்கித் தள்ளுவது போல்”
3.நாம் தீமைகளை நம்மிடமிருந்து விலக்கித் தள்ள வேண்டும் என்றால்
4.தீமைகளை அகற்றிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்ப்பித்துக் கொள்ள வேண்டும்.
கூட்டுத் தியானத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் வலுக் கொண்டு அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து நாம் விடும் மூச்சலைகள் கொண்டு தீமையை விளைவிக்கும் உணர்வுகளை நம்மிடமிருந்து விலகிச் செல்லச் செய்ய முடியும்.
நாம் அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பருகும் நிலையாக நாம் அனைவரும் ஒருக்கிணைந்து எடுக்கும் இந்த எண்ண வலுவின் துணை கொண்டு தான் நாம் இவ்வாறு செய்ய முடியும்.
ஒரு நெல்லை வைத்து ஒருவர் உணவாக உட்கொள்ள முடியாது.
நாம் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அது பல நெல்களாகக் குவிகின்றது.
அதைச் சமைத்துச் சாப்பிட்டால் அவரவர் பசி தீர்ப்பது போல் நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணைந்து
1.அந்த வலுவின் தன்மை கொண்டு
2.உயர்ந்த ஞானியின் உணர்வை நமக்குள் சமைத்து
3.அருள் ஞான உணர்வை நமக்குள் விளையச் செய்ய முடியும்.
ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை வேக வைத்து நீக்குவது போல் அருள் ஞானிகளின் உணர்வை நம் நற்குணங்களுடன் இணைத்து நம்மை அறியாது வந்த தீமையை அகற்றிடல் வேண்டும்.
அருள் ஞானிகள் உணர்வை… “நாம் இரசித்து உணவாக உட்கொள்ளும் அந்த உணர்வின் சத்தை… இணைத்து இணைத்து” நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிட முடியும்.
அனைவரும் இதைப் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் பிரார்த்திக்கின்றேன்.
7. மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் எப்படி இணைத்து இணைத்துக் கொடுக்கின்றோம்
நான் (ஞானகுரு) திரும்பத் திரும்பச் சொல்கிறேன் யாரும் என்று எண்ண வேண்டாம்.
1.ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அதனுடன்
2.ஒன்றோடு ஒன்று இணைத்து இணைத்து இணைத்து
3.அந்த ஆற்றல்மிக சக்தியை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத்தான் திரும்பத் திரும்ப சொல்வது.
ஏனென்றால் மனிதனுக்குள் 1008 குணங்கள் உண்டு. ஒரு குணத்தைப் பற்றிச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துடன் இன்னொரு குணம் சேரும் போது என்ன செய்கின்றது?
அந்த இன்னொரு குணத்துடன் சேர்ந்து இயக்கப்படும்போது
1.அதனுடன் எதை இணைத்து
2.அதை எப்படி அடக்குவது என்பதற்காக வேண்டித்தான்
3.அந்த மகரிஷியின் அருள் சக்திகளை உங்கள் குணங்கள் எல்லாவற்றிலும்
4.இணைத்து இணைத்துக் கொடுப்பது…!
என்ன சாமி…! திரும்பத் திரும்ப அப்போதும் சொன்னார்… இப்போதும் சொல்கிறார்…! என்று எண்ணுவார்கள்.
மிளகாயை மாவிலே போட்டுச் சுட்டால் “வடை” ஒரு பதத்தில் ருசியாக இருக்கும். அதே மாவில் மிளகாய்க்குப் பதில் இனிப்பைப் போட்டு ஊற்றினால் “பனியாரம்” அது ஒரு பக்குவமாக ருசியாக இருக்கும்.
இதே மாதிரித் தான் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை எதிலே கொண்டு போய் இணைத்தாலும் அதைச் சுவையாக ஆக்கி அந்த உணர்வாக இயக்க வேண்டும்.
வாழ்க்கையில் எந்தெந்த குணங்கள் உங்களை இயக்கினாலும் அந்த நேரம் ஞானிகளின் உணர்ச்சியை உங்களிடம் தூண்டச் செய்து அந்த உணர்வை உங்களுடன் இணைக்கப்படும் போது சந்தர்ப்பத்தால் வந்த தீமையான குணங்களை அடக்கும் சக்தியாக உங்களுக்குள் வளரும்.
அதற்குத்தான் இந்த விரிவுரைகளைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று இணைத்து இணைத்து அந்த உணர்வின் அணுக்களாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஏனென்றால் பள்ளிக்கூடத்தில் படிக்கப்போகும் போது ஒரு விஞ்ஞான அறிவோ அல்லது டெக்னிக்கலோ இதைச் சொல்லும் போது அது திரும்பத் திரும்பச் சொல்லி இது இதனுடன் சேர்க்கப்படும் போது இவ்வாறு ஆகும் என்பார்கள்.
ஒவ்வொரு பாட நிலைகளையும் கொடுக்கும் பொழுது செயின் (CHAIN) தொடர் போல ஒவ்வொன்றையும் இணைத்தே தான் சொல்வார்கள்.
இங்கே இயக்கப்படும் போது இதனுடைய சுழற்சி இப்படி வருகின்றது. இந்த இயக்கத்தின் நிலைகள் இது தடைப்பட்டால் மாற்றங்கள் இப்படி ஆகும் என்கின்ற வகையில் அந்தக் குறிப்பைப் பதிவு செய்து கொடுப்பார்கள்.
அதன் பின் தான் நாம் ஒரு இயந்திரத்தையோ அல்லது ஒரு செயலையோ முழுமையாக இயக்க முடிகின்றது.
1.இயக்கத்தை மட்டும் சொல்லிக் கொண்டே போனாலும்
2.இரண்டாவது அதைச் செயலாக்கப்படும் போது இதில் இன்னென்ன பிழைகள் என்ன வரும் என்று
3.இதைச் சொல்லாதபடி இயக்கத்தைப் பற்றிச் சொன்னால் தெரியாது…
4.அறியும் ஆற்றல் வராது.
இன்று பத்திரிக்கையில் படிக்கின்றோம் அல்லவா…! நேற்றுச் சொன்னதையே அடுத்த நாளும் திருப்பிச் சொல்லி அதனின் தொடர்ச்சியாகக் கொண்டு வருவார்கள்.
இன்ன செயலைச் செய்துவிட்டுத் திருடர்கள் தப்பி விட்டார்கள். அடுத்து அதற்காக இன்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்று பத்திரிக்கையில் நேற்று போட்டிருந்தார்கள் என்றால் அதனின் தொடர்ச்சியாக அதைச் சொல்லித்தான் அடுத்த கட்டம் என்ன ஆகின்றது என்று அடுத்த நாள் சொல்ல முடியும்.
அப்படி மறுபடியும் அதை இன்றைக்குச் சொல்லவில்லை என்றால் அன்றைக்கு இருந்ததை எப்படி நாம் தெரிந்து கொள்வது…? முடியாது.
ஆனாலும் சிலர் என்ன செய்கிறார்கள்… சொல்கிறார்கள்…?
இந்த உபதேசத்தை நேற்றுச் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறார் என்பார்கள். ஆனால் திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.
1.அந்த மாதிரிப் பயனற்றுப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்
2.நீங்கள் மறந்தாலும் அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுபடுத்தி
3.உங்களை மீண்டும் மீண்டும் எண்ணி எடுக்கும்படி செய்கின்றோம்.
8. இந்தத் தியானத்தின் மூலம் விண்ணிலிருக்கும் மெய்ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்”
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்களும் பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.
குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.
கண்களைத் திறந்தே தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.
இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம்.
கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.
நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள் உருவாகும்.
உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.
உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும்பெரும் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி
2.இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் குரு அருளும் உங்கள் உடலுக்குள்
1.இயங்கிக் கொண்டிருப்பதை
2.இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.
உங்கள் ஆன்மாவில் இப்போது அவருடைய உணர்வுகள் காட்சியாகவும் வரலாம். சொல்லாகவும் வரலாம்.
1.ஒலி ஒளி என்ற நிலையில் காற்றிலிருந்து வரும் அலைகளை
2.டிவி யில் எப்படிக் கவர்ந்து படமாகப் பார்க்கின்றோமோ
3.ஒலியாகக் கேட்கின்றோமோ இதைப்போல
4.உங்கள் ஆன்மாவில் படர்ந்திருப்பதை நீங்கள் நுகரப்படும்போது
5.அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு
6.காட்சியாகவும் உணர்வாகவும் அறிய முடியும்.
யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைப் பதிவாக்கி அந்த நினைவுடன் இவ்வாறு ஏங்கித் தியானித்து வரும் பொழுது உங்கள் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் ஒளிகள் பெருகத் தொடங்கும்.
ஒளி அலைகள் பெருகும்பொழுது உங்கள் சுவாசத்தில் கலந்து உயிரிலே படும்பொழுது அந்த உணர்ச்சிகள் தோன்றும். அதன் துணை கொண்டு அந்த ஞானிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.
விண்ணிலிருந்து கணப்பொழுதில் அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும். (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)
9. “மேல் நோக்கிய சுவாசம்…” மிக மிக முக்கியமானது
மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள் தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.
அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.
சிலர் அடி பணியும் நிலைகள் கொண்டு கீழ் நோக்கி எண்ணிச் சுவாசிக்கின்றார்கள். மேல் நோக்கி எண்ணி எடுப்பதற்கு பதில் கீழ் நோக்கி எடுக்கும் பொழுது சாதாரண மனிதருடைய உணர்வைத்தான் பெற முடியும்.
ஏனென்றால் நாம் பெறவேண்டிய ஆற்றல் விண்ணிலே இருக்கின்றது. விண்ணின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்களும் அதே வழியில் எண்ணினால் அந்தச் சக்திகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.
சாதாரண வாழ்க்கையில் பெரியவர்களுக்குப் பாத பூஜையும் பாத நமஸ்காரமும் கும்ப அபிஷேகமும் செய்து அடிபணிந்தே பழகிவிட்டோம்.
நமக்குள் வரும் இந்த ஆசை நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.
1.இந்த உயர்வு நமக்குத் தேவை இல்லை.
2.உயர்ந்த எண்ணங்கள் தான் நமக்குத் தேவை.
3.நாம் எந்த உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு வருகின்றமோ
4.அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் தூண்ட வேண்டும்.
பிறரைப் போற்றிப் புகழ்ந்து பேசித் துதிக்க வேண்டும். அப்படியெல்லாம் போற்றினால் தான் நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நம் எண்ணங்கள் செல்லக்கூடாது.
1.மெய் ஒளி பெறும் உயர்வான எண்ணங்களை எடுத்து எடுத்து எடுத்து
2.நம் உடலுக்குள் தீமையான உணர்வுகளையும் தீய வினைகளையும்
3.(அவைகளை) அடிபணியச் செய்ய வைக்க வேண்டும்.
4.இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.
அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெறவேண்டும். அந்த அருள் ஆற்றல் எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வைக் கொண்டு வாருங்கள்.
மனித உணர்விற்குள் வரும் தீமைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் குறைப்பதற்கு தயவு செய்து ஒவ்வொரு நொடியிலும் அந்த ஞானிகளின் உணர்வை எடுத்துப் பழகுங்கள்.
தீமைகள் வரும் பொழுது “ஈஸ்வரா…” என்று மேல் நோக்கிச் சுவாசித்து விண்ணின் ஆற்றலைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆன்மாவிற்குள் தீமைகள் புக முடியாது தடையாகும். செய்து பாருங்கள்.
தீமையை நீக்கும் சக்தியே நமக்குத் தேவை. உயிராத்மாவிற்குச் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து என்பது அது தான். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் நாம் அனைவரும் பெறவேண்டும்.
மனிதனுக்கு மட்டும் தான் அந்தத் தகுதி உண்டு.
10. “ஞானகுரு… உங்கள் உணர்வுக்குள் தான் இருக்கிறேன்” – பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நான் (ஞானகுரு) வந்தவுடன் “எங்கள் வீட்டுக்கு வாருங்கள்… எங்கள் வீட்டுக்கு வாருங்கள்…. வந்து சாப்பிட்டுவிட்டுப் போங்கள்…!” என்று சொல்வதற்குத்தான் ஆள்கள் இருக்கின்றது.
சாமி…!
1.நீங்கள் சொன்ன சக்திகள் அனைத்தும் எங்களுக்குள் உருப் பெறவேண்டும்.
2.நாங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்.
3.எங்கள் பார்வை நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்பவர்கள் “யாரும் இல்லை”.
சாமி உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். “சாமி…” உங்கள் உணர்வுக்குள்ளே தான் இருக்கிறேன்.
1.குருவின் உணர்வை நீங்கள் பெற்றீர்கள் என்றால்
2.அந்த உணர்விலிருந்து எல்லாமே நீங்கள் பெறலாம்
அந்த நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.
சாமியாரைப் பார்த்து.. அவரைப் பார்த்து… இவரைப் பார்த்து… கடைசியில் “சாமியார் தான் எல்லாவற்றையும் மீட்டிக் கொடுப்பார்…” என்று நினைக்கிறீர்கள்.
அருள் ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வை நீக்குகின்றது. உங்கள் உடலை நலமாக்குகின்றது. உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.
இந்தப் பழக்கங்கள் வரவேண்டும்.
டி.வி, ரேடியோவில் ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் எந்த ஸடேசனை நீங்கள் திருப்பி வைக்கிறீர்களோ அதுதான் வருகிறது. அந்த அலைகளை நீங்கள் காட்சியாகவும் பார்க்கின்றீர்கள். பாடல்களையும் கேட்கிறீர்கள்.
இதே மாதிரித்தான் உங்கள் உடலுக்குள்ளும் நடக்கின்றது.
பல பேரைச் சந்திக்கிறீர்கள். சண்டை போடுகிறவர்களைப் பார்க்கின்றீர்கள்; வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள் கோபப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; சஞ்சலப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; சங்கடப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; குரோதமாக இருக்கிறவர்களையும் பார்க்கின்றீர்கள். குரோதத்தால் பிறரை அழிக்கக்கூடிய உணர்வையும் பார்க்கின்றீர்கள்; தெரிந்த்தே தப்புப் பண்ணுபவர்களையும் பார்க்கின்றீர்கள்.
இதை எல்லாம் பதிவாக்கிக் கொள்கிறீர்கள்.
1.இதிலே நீங்கள் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றீர்களோ…
2.”அடப் பாவிப் பயலே… இப்படிச் செய்கிறேயடா..!” என்று
3.அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் அந்தக் காட்சிகள் தான் வரும்.
எந்தக் காட்சி? அவன் சண்டை போடுவது திருடுவது ஏமாற்றுவது.
நான் அன்றைக்கு அந்தப் பையனைப் பார்த்தேன்… கஷ்டப்படுகிறான்… என்ற நினைவு வந்து அந்த ஸ்விட்சைப் போட்டீரகள் என்றால்
1.“அடப்பாவமே அவன் இப்படிக் கஷ்டப்படுகின்றான்…” என்று இந்தக் காட்சி உங்களுக்குள் வரும்.
2.அந்த வேதனை உங்களுக்குள் வரும். இத்தனை வேலையும் நடக்கும்.
அதே மாதிரி பணம் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை. அவன் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டானே என்று அந்த ஸ்டேசனை வைத்தால்
1.ஏமாற்றப்பட்ட உணர்வலைகள் காற்றிலிருக்கின்றது,
2.உடனே அது உங்களுக்குள் வந்து வேலை செய்கிறது.
3.அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுகள் வாடுகின்றது.
இதே போலத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வு இந்தக் காற்றிலே கலந்திருக்கின்றது. உங்களுக்குள் ஆழமாக அதைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.
சூரியன் எப்படி உருவானது? மனிதன் எப்படி உருவானான்? மனிதனான பின் அகஸ்தியன் ஒளிச் சரீரம் எப்படி ஆனான் என்று சொல்கிறோம்.
அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறோம். அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.
1.இந்த ஸ்டேசனைத் திறந்தால்
2.அந்த அகஸ்தியனின் உணர்வு வரும்.
3.நமக்குள் கோபிக்கும் உணர்வை தடுக்கும்.
4.நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும்.
5.நம்மை அறியாத வந்த தீமைகளைத் துடைக்கும்.
இதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன். ஏனென்றால் குருநாதர் அந்தச் சக்தி கொடுத்தார். எல்லாமே செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.
சாமி பார்த்துக் கொள்ளும் என்று கோயிலில் போய் கஷ்டத்தை எல்லாம் சொல்கிற மாதிரி அந்த நம்பிக்கையிலே இருக்கும் போது என்னைப் பார்த்தவுடனே ஆயிரம் கஷ்டங்களைச் சொல்கிறார்கள். ஆயிரம் வம்புகளைச் சொல்கிறார்கள்,
நான் இதையெல்லாம் கேட்டு என்ன செய்ய…!
இப்படி நூறு பேர் வந்து என் காதில் சொன்னால் நான் எடுத்துக் கொண்ட சக்தியை நீங்கள் தடைப்படுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம்.
1.நீங்கள் நல்லதைப் பெறுவதற்கு பதில்
2.அதைத் தடை விதித்துக் கொள்கிறீர்கள்.
உங்களுக்குள் அந்த உணர்வு வளர்ந்து விட்டால் நான் சொன்ன அந்த வாக்கை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது போய் விடுகிறது.
1.அருள் ஒளி பெற வேண்டும்.
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
4.உடல் நலம் பெற வேண்டும்.
5.எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
6.என் தொழில் நலம் பெற வேண்டும்.
7.என் பையன் நல்லவனாக வேண்டும் என்று கேளுங்கள்.
அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களுக்கு இந்த நிலை வேண்டும் என்று தான் நான் கேட்கச் சொல்கிறேன்.
எத்தனை பேர் இப்படிக் கேட்கிறீர்கள்…!
இவ்வளவு தூரம் நான் சொல்கிறேன். இருந்தாலும் இப்பொழுத் தான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். “நீங்கள் பெரிய மகான்…” என்று சொல்லி “என் கஷ்டம் இப்படி இருக்கிறது…!” என்று சொல்லி உடனே அழுக ஆரம்பித்துவிடுகிறார்கள்.
நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடுகின்றார்கள். அவர்களுக்குள் எது பதிவானதோ அந்த உணர்வு தான் வேலை செய்கிறது.
யாம் சொல்லும் உயர்ந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அவர்கள் பெறும் தகுதியை அவர்கள் உடலுக்குள் இருக்கும் உணர்வே தடை படுத்துகின்றது என்று உணர்கிறார்கள். உணர்ந்தாலும் அதை அறிய முடிவதில்லை.
ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம்.
1.இன்னும் கொஞ்சம் இருக்கிறது
2.அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.
11. “மகரிஷிகளின் உணர்வலைகள்” ஒளிக்கற்றைகளாக உங்களுக்குள் இணைவதைக் காண முடியும்
அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைக்கப்படும் பொழுது
1.அந்த நஞ்சினை ஒளியாக மாற்றி அறிவின் ஞானமாகவும்
2.இந்த மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும்
3.அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது.
அதைப் பெறச் செய்வதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்.
ஆகவே மறவாதீர்கள். உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.
இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.
அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.
யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.
ஒவ்வொரு நொடியிலேயும் சங்கடங்களோ சலிப்போ மற்ற தீமைகள் வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
1.உங்கள் ஏக்கத்தை விண்ணை நோக்கிச் செலுத்துங்கள்.
2.இலேசாக உங்கள் எண்ணத்தை உயர்வாக (மேல் நோக்கி) எண்ணுங்கள்.
3.இப்பொழுது உங்கள் எண்ணம் ஆன்மாவைக் கடந்து செல்கின்றது.
4.மேல் நோக்கிய நிலைகளில் ஆன்மாவைக் கடந்து நுகரப்படும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை நுகர முடியும்.
அமைதியாக இருக்கும் தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால் அலைகள் தனக்குள் அலை அலைகளாக மாறுகின்றது. இதைப் போல
1.மகரிஷிகளின் உணர்வின் அலைகள் உங்களுக்குள் வருவதை
2.அந்த ஒளிக்கதிர்களை உங்களால் உணர முடியும்.
3.கண்களால் பார்க்கவும் முடியும்.
உங்கள் ஆன்மாவில் பட்ட தீமைகளை இது அகற்றும். உங்கள் உடலுக்குள் ஊடுருவி ஒளியான உணர்வின் ஆற்றல் பெருகும். இதை உங்களால் நுகர முடியும்.
ஆனால் அதே சமயத்தில் அதிகமாகக் காட்சிகளைக் கொடுத்துவிட்டால் பயப்படுவோர் நிறைய உண்டு.
“ஐய்யோ.., திடீர் என்று என்னமோ தெரிகின்றது. இதனால் என்ன ஆகுமோ…?” என்று எண்ணுவார்கள்.
1.கிடைப்பதைப் பற்றிச் சந்தோஷப்பட்டு
2.”மேலும் பெறவேண்டும்” என்று எண்ணுவது ஒரு சிலரே.
ஆனால் பலர் இந்த மாதிரித் தெரிகிறது. இது ரைட்டா…? தப்பா…? இந்தக் கால்குலேசன் (CALCULATION) போட ஆரம்பித்துவிடுகின்றார்கள்.
1.இதனால் ஏதாவது நல்லதாகுமா…?
2.அல்லது இதனால் கெட்டதாகி விடுமோ…?
கிடைத்ததையும் இழக்கும் நிலைகளில் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை இருக்கின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மன பலத்துடன் மகரிஷிகள் கண்டதை முழுமையாக உணர வேண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் அந்த வலிமையைக் கூட்டினால் “உங்கள் வளர்ச்சியை நீங்களே பார்க்கலாம்.”
12. பிரபஞ்சம் உருவாகி முழுமை அடைந்து அதில் உருவான உயிர் விண் செல்லும் பக்குவம் – “அகஸ்தியன் கண்ட மெய் வழி”
ஆதியிலே விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவானது. வெப்பத்தின் தன்மை வரும் போது தான் ஆவியானது. ஆவியின் தன்மை தான் விஷமானது. விஷத்தின் தாக்குதல் தான் மீண்டும் வெப்பமாகின்றது.
வெப்பத்தின் நிலை வரும் போது தான் அது நகர்ந்து ஓடுகின்றது. அப்போது காந்தம் என்ற உணர்வு உருவாகின்றது. காந்தம் என்ற உணர்வு உருவானபின் தன் அருகிலே இருப்பதைக் கவர்ந்து மோதி வெப்பமாகின்றது.
இதிலிருந்த விஷத்தின் தன்மை எதன் மணத்தை அது நுகர்ந்ததோ அதன் மணத்தை வெளிப்படுத்தும் அணுவாக ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது.
இப்படித்தான் உலகம் உருவானது என்பதனை அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்தான்.
ஆகவே அதன் வழி சிறுகச் சிறுக சிறு துளி பெரு வெள்ளம் போல
மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிராக வைத்து பாற்கடலைக் கடைந்தார்கள் வியாசகர் சொன்னார்.
பல அணுக்களின் தன்மையால் பூமி உருவானது என்ற நிலையை அன்று வியாசகர் அகஸ்தியன் கண்ட உண்மையை வெளிப்படுத்தினார்.
சிறுகச் சிறுக சேர்ந்த உணர்வுகள் அதனின் சுழற்சி வேகம் கூடக் கூட நெருப்பாக மாறி அந்த பூமிக்குள் வெப்பத்தின் தன்மை அதிகரித்து அதிகரித்து பாறைகள் எல்லாம் உருகி உருகி கடைசியில் அமில சக்தி அடைகின்றது நட்சத்திரமாக.
அமில சக்தியான பின் அது தூவும் உணர்வுகள் தான் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது.
ஒரு நூலாம்படைப் பூச்சி தன் மலத்தால் நூலாம்படையாக வலை விரித்து அதில் சிக்கும் மற்ற உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்கின்றது.
இதைப்போலத்தான் நட்சத்திரங்களும் தன் அமிலங்களைக் கக்கப்படும் போது வலை போன்று விரிந்து அகண்ட அண்டத்தில் பரவி வரும் உணர்வுகளை இது கவர்ந்து அதை உணவாக உட்கொண்டு சூரியனாக மாறுகின்றது.
சூரியனாகி அதனுடைய வளர்ச்சியில் தன் ஈர்ப்பு வட்டத்தில் இந்தப் பிரபஞ்சத்தையே உருவாக்குகின்றது. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி பெற்ற தன் வளர்ச்சியிலே மனிதனை உருவாக்குகின்றது.
நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.
இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்.
தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.
நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.
மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.
இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.
பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.
சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.
இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.
ஆனால் இதிலிருந்து தப்பிய இந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.
நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.
உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.
விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதில் இருந்து மீட்டுக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உபதேசிக்கின்றோம். இப்பொழுது பதிவாகின்றது.
1.இதனை நீங்கள் நினைவு கூறுங்கள்.
2.கூட்டுத் தியானம் செய்யுங்கள்
3.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று பாய்ச்சுங்கள்.
4.கருவிலே வளரும் சிசு இதைப்பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
இதைப்போல எண்ணி இவ்வுலகில் வரும் விஷத் தன்மைகளை மாற்றி இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ முடியும்.
1.“ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக”
2.உலக இருளை மாய்த்திடும் அருள் கூட்டத்துடன் நாம் இணைந்து
3.அமைதியும் சாந்தமும் பெற்று ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையாக
4.என்றும் அருள் ஒளிச்சுடராக பேரானந்த நிலையாகச் சந்தோஷ உணர்வுடன் நாம் வாழ முடியும்.
“நெகட்டிவ் பாசிட்டிவ்…” என்ற எதிர்மறையான உணர்வின் இயக்கங்கள் வந்தாலும் தீய வினைகளாக அதை நமக்குள் சேர விடக்கூடாது
ரோஜாப்பூ மணத்தை நாம் விரும்பி எடுத்துக் கொண்டால் அந்த ரோஜாப்பூவின் மணத்தைப் பற்றித் தான் நாம் பேசுவோம்.
கசப்பான உணவை ருசியாகச் சாப்பிட்டுப் பழகிவிட்டால் அந்தக் கசப்பின் தன்மையைப் பற்றி ரசித்துப் பேசுகின்றோம்.
இனிப்பான பதார்த்தங்களை விரும்பிச் சுவைத்துச் சாப்பிட்டால் “ஆஹா எப்படி இருக்கின்றது…!” என்று சொல்கின்றோம்.
காரத்தை ருசியாக வைத்து அது முன்னிலையில் வைத்து காரத்தைச் சாப்பிட்டவர்கள் “ஆஹா இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கின்றது…!” என்று சொல்வார்கள்.
காரத்தைச் சாப்பிட்டவர் காரத்தைப் பற்றி ரசித்துச் சொல்லும் போது இனிப்பை விரும்பிச் சாப்பிட்டவர்களுக்கு வெறுப்பு வரும்.
கசப்பை விரும்பிச் சாப்பிட்டவர்கள் கசப்பைப் பற்றி ரசித்துச் சொல்லும் போது இது மற்றவர்கள் கேட்டு அறிந்தபின் அந்தக் கசப்பான உணர்வு வெறுப்பை உண்டாக்கும்.
இதைப் போல நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வுகள் நமக்குள் எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி தீய வினைகளாகச் சேருகின்றது.
ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைக் காத்திடத் தன் கௌரவத்தை வளர்த்துக் கொள்ள மற்றவர்களுடன் பேசும் போதே
1.”அடேயப்பா…! பெரிய ஆள் மாதிரி நீ என்ன…,
2.எல்லோரையும் விடப் பெரியவனா…?” என்று சொன்னால் போதும்.
பார்…! நான்கு பேர் மத்தியில் என்னைக் கேவலமாகப் பேசிவிட்டாய். உன்னை என்ன செய்கின்றேன் பார்…? என்று இப்படித் தன் கௌரவம் போய்விட்டதே என்று அவர் பேசத் தொடங்கிவிடுவார்.
இவர் என்ன… இல்லாததைச் சொல்லுகின்றார்…! என்னைக் கேவலமாகப் பேசுகின்றார் என்று எண்ணி பதிலுக்கு இவரும் இதைச் சொன்னார் என்றால் அந்தச் சந்தர்ப்பம் உடனே பழி தீர்க்கும் உணர்வுகளாக உருவாகின்றது.
இந்த உணர்வுகள் நமக்குள் ஒரு வித்தாகி பழி தீர்க்கும் உணர்ச்சிகளைத் தூண்டி நமக்குள் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாக ஆக்கிவிடுகின்றது.
பழி தீர்க்கும் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் ஊட்டி நம் நல்ல எண்ணங்களை அது செயலாக்க விடாதபடி நமக்குள் கடுமையான வினைகளாகின்றது.
நம்மை அழித்திடும் உணர்வாக அந்த வினைகள் வளர்கின்றது. இதை நாம் நிறுத்த வேண்டும்.
அதற்குத்தான் விநாயகர் சதுர்த்தி என்று காட்டினார்கள். நம்மை அறியாது சேரும் தீய வினைகளை உடனுக்குடன் நிறுத்திப் பழக வேண்டும்.
ஒரு வித்து தெரியாமல் மண்ணிலே விழுந்தாலும் அது தன் இனமான சத்தைக் கவர்ந்து வளரத் தொடங்கிவிடும். பின் அது தன் விழுதுகளைப் பாய்ச்சி பெரிதாகவே வளர்ந்துவிடும்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.பிறர் செய்கைகள் நமக்குப் பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று
2.வெறுப்படைந்தாலும் அல்லது கோபப்பட்டாலும் அல்லது வேதனைப்பட்டாலும்
3.அது நமக்குள் தீய வினைகளாகத்தான் சேரும்.
அதை மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று அந்த நல்ல சக்திகளை நல்ல வினைகளாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தீமைகளைப் பற்றற்றதாக ஆக்கி மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றும் பழக்கம் நமக்கு வரவேண்டும்.
13. “அகஸ்தியன் ரூபத்தையும்” அவர் கண்ட பேருண்மைகளையும் நீங்களும் காணலாம்
அன்று அகஸ்தியனால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையும் இன்று அவர்கள் எடுத்த நிலைகளில் இதே போன்றுதான் தான் கண்டுணர்ந்த உணர்வும்
மனிதனுக்குகந்த உணவு வகைகளை தாவர இனங்களை எடுத்து “சோளம் கம்பு ராகி பயிர்களும் கொய்யா…,” போன்ற கனி வர்க்கங்களையும் அகஸ்தியனால் அன்று உருவாக்கப்பட்டது.
காடுகளில் இதெல்லாம் நிறைய உண்டு.
தான் கண்டுணர்ந்த உணர்வுகள் அவன் எதை எதையெல்லாம் இணைத்து உண்மைகளைத் தனக்குள் உணர்ந்தான் என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
முதலில் துருவன் என்ற நிலைகள் வரப்போகும் போது
1.அந்தப் புவியின் நிலைகளை எப்படி வளர்கின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி வளர்கின்றது…?
3.இயற்கையிலே அகஸ்தியன் இணைத்துக் காட்டுகின்றான்.
அகஸ்தியர் உடலிலே விளைந்ததும் அவன் இணைத்த ரூபங்களையும் பார்க்கின்றேன். அந்த அலைகளை… எப்படி அந்த உணர்ச்சிகளை இயக்கி அகஸ்தியர் காணுகின்றார் என்ற நிலையும் பார்க்க முடிந்தது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களுக்கே அழைத்துச் சென்று அந்த அலைகளை நுகரும்படிச் செய்து நேரடியாகவே காண்பிக்கின்றார்.
நான் இங்கே இப்பொழுது சொல்வது போல் இதே மாதிரி சொல்லாகச் சொல்லி இந்த உணர்வுகளை இயக்கச் செய்து அதன் வழியில் சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டில் உள்ள உணர்வுகளை எடுத்துப் பார்க்கும் போது
1.அகஸ்தியருடைய ரூபமும்
2.அவர் கண்டுணர்ந்த உணர்வும்
3.அந்த உணர்வின் ஒலிகளையும் நான் காண முடிந்தது.
அகஸ்தியர் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்
ஆனால் நீங்கள் எதை எண்ணிக் கொண்டு இங்கே வருகின்றீர்கள்?
சாமியிடம் கேட்டுத் தலை வலி நீங்கினால் போதும். தொழில் வந்தால் போதும் என்ற நிலையில் தான் வருகின்றீர்கள்.
அந்த மெய் ஞானி உணர்வுகளை நுகர்ந்தால் வந்தால் இந்தத் தீமைகளை எல்லாம் அகற்றிவிடும். மெய்ப் பொருளை வளர்க்க முடியும். தீமையற்ற நிலையாக வாழ முடியும் என்று சொல்கிறோம்.
இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை. இந்த உடல் நிலையானதில்லை. ஆனால் இந்த உயிர் என்றும் நிலையானது.
அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மையை இந்த மனித உடலில் இருந்து தான் கருவாக்கினான் அகஸ்தியன்.
அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்….!
இந்த உடலை விட்டுச் சென்றால்… “என்றும் நிலையான… ஒளியின் சரீரமாக இருக்க முடியும்…!” என்ற அந்த நோக்கத்துடன் எவர் வருகின்றனரோ அவர்கள் அனைவருமே நிச்சயம் அகஸ்தியனைப் போன்று பெற முடியும்.
14. எல்லா மகரிஷிகளும் “27 நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்துத் தான்…” ஒளியின் சரீரம் பெற்றார்கள் – 27 நட்சத்திரத்தின் சக்தியை ஒன்றாக எடுப்பது முக்கியமானது
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை எண்ணி 27 நட்சத்திரங்களின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
27 நட்சத்திரங்களையும் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டும் பொழுது
1.அந்த 27 நட்சத்திரத்தையும் எப்படித் தொட வேண்டும் என்று
2.எனக்கு அந்தப் பக்குவத்தைக் கொடுத்தார்கள்.
3.இதை எதனுடன் இணைக்க வேண்டும்.
4.அதை எடுத்தால் அந்தக் கதிரியக்கங்கள் உன்னை எப்படிச் சுடாதிருக்கும்
5..அந்தக் கதிரியக்கங்கள் உன்னைத் தொடாதிருக்கும் என்பதையும் காட்டினார் குருநாதர்.
அதன் வழி கொண்டு பிரார்த்தனை செய்து விட்டுத் தான் குருவின் துணை கொண்டு 27 நட்சத்திரங்களின் சக்திகளை நான் கவர்கின்றேன்.
கவர்ந்த அந்த நிலை கொண்டு தான் 27 நட்சத்திரத்தின் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
1.உங்களை எண்ணச் சொல்லி - இந்த இணைப்புடன்
2அதை ஊழ் வினையாக உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதியச் செய்கின்றேன்.
அதை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்வதற்கும் அந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்களையும் சமப்படுத்தும் நிலைக்கும் கொண்டு வருகின்றோம்.
ஏனென்றால் மகரிஷிகள் அனைவவருமே
1.அந்த 27 நட்சத்திரத்தினுடைய உணர்வுகளை எடுத்துத் தான்
2.அது அனைத்தையும் ஒன்றாக்கி
3.தனக்குள் ஒளியாக ஒளியின் சரீரமாக மாற்றினார்கள்.
எதுவும் இயக்கமல்லாது அதனின் உணர்வின் இயக்கமாக மாற்றி NEGATIVE/POSITIVE +/- கரண்ட் எப்படி உண்டாகின்றதோ அதைப் போல சம நிலைப்படுத்தி ஒருமையின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இறையாக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்.
அதனின் தன்மையை நீங்களும் பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் இந்த 27 நட்சத்திரத்தின் சக்தியை உங்களை எடுக்கச் சொல்கிறோம்.
மகரிஷிகள் இதையெல்லாம் வடித்துக் கொண்டவர்கள்.
அந்த உணர்வின் சத்துக்களை இதனுடன் இரண்டறக் கலந்து அது புதுப் புது எண்ணங்களாக உருவாக்கி அதனின் துணை கொண்டு இதை நீங்கள் பருகும் நிலைக்கே இதைச் செய்கின்றோம்.
உங்கள் வாழ்க்கயில் நீங்கள் எதை எண்ணினாலும் இதைப் பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் இருப்பீர்கள் என்றால் அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகி அதனின் செயலாக உங்கள் உணர்வுகள் இயங்கி அந்த மெய் ஞானியின் உணர்வின் ஒளியைப் பெறக்கூடிய தகுதியை பெறுகின்றீர்கள்.
இப்படி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் வலுபெறுகின்றது. அப்பொழுது அதனின் துணை கொண்டு நமது ஆன்மாவாக மாறுகின்றது.
இந்த உணர்வின் துணை கொண்டு தான் நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெற முடிகின்றது. ஆகவே
1.உயிரை ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதனின் நினைவு கொண்டு செயல்படுங்கள்.