மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் திரு அருள்

Contents:-
1. குருநாதர் எம்மைப் பொட்டில் தொட்டுக் காட்டவில்லை என் ஒவ்வொரு உணர்வுகளிலும் அவர் உணர்த்தும் உணர்வின் தன்மையைத் தொட வைத்தார்
2. மெய்ஞானிகளுடன் ஒன்றும் பாதையை குருநாதர் தெளிவாகக் காட்டினார்
3. குருநாதர் எம்மைத் தேடி வந்து சக்தியைக் கொடுத்தார் உங்களைத் தேடி வந்து அதைக் கொடுக்கின்றோம்
4. உங்களை அறியாமல் உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் ஆற்றலைத்தான் (POWER) கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்
5. உங்களுக்குக் காசு எதற்காகக் கொடுக்கின்றேன்?
6. ஏட்டிலும் இல்லை, எந்தப் பாட்டிலும் இல்லை, உங்கள் கூட்டிலும் இல்லை
7. சூட்சமத்தில் (கண்ணுக்குப் புலப்படாமல்) இயங்கும் நிலைகளைக் காணச் செய்தார், உணரச் செய்தார் குருநாதர் – ஞானக்கண்
8. எனது வேலை - கடவுளை நான் எங்கேயும் தேடவில்லை, உங்களைத் தான் கடவுளாக்குகின்றேன்
9. பண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி அருளைப் பெருக்கி மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்வதே நம் குரு காட்டிய அருள்வழி
10. யாம் கொடுக்கும் தீமையை நீக்கும் பயிற்சிக்குக் காசு பணம் எதுவும் தேவையில்லை
11. குருநாதர் ஒளியான உணர்வு காற்றில் உள்ளது அதை நாம் பெறுதல் வேண்டும்
12. விண் செல்லும் மார்க்கத்தை உங்களுக்கு மிகவும் எளிதில் கிட்டும்படிச் செய்கின்றேன், விட்டு விடாதீர்கள்
13. குரு காட்டிய வழியினைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்கு யாம் செய்வது என்ன
1 குருநாதர் எம்மைப் பொட்டில் தொட்டுக் காட்டவில்லை என் ஒவ்வொரு உணர்வுகளிலும் அவர் உணர்த்தும் உணர்வின் தன்மையைத் தொட வைத்தார்
ஒரு வேப்ப மரத்தின் தன்மை பல பல உணர்வுகளைக் கண்டாலும் தன் கசப்பின் உணர்வைப் பாய்ச்சும் நிலைகள் கொண்டது.
ஒர் ரோஜாப் பூவின் தன்மை பல பல உணர்வுகளைக் கண்டாலும் தன் துவர்ப்பின் தன்மையும் நறுமணத்தை வெளிப்படுத்தும் நிலைகள் கொண்டது.
இதைப் போன்று தான் ஒவ்வொரு தாவர இனமும் அதனின் நுகர்ந்தறிந்த உணர்வின் மணங்கள் அதனுடைய ரூபங்கள் எதுவோ அதை நுகர்ந்தறியப்படும் பொழுது அதனின் உணர்வின் எண்ணங்களாக நமக்குள் இயக்குகின்றது.
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவுறக் காட்டிய அந்த ஞானியின் உணர்வின் தன்மையைப் பிரித்தறிந்து, அவர் விளைவித்த உணர்வும் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளும் அவர் அறிந்துணர்ந்த நிலையும் அவர் ஆற்றல் பெற்ற நிலைகளும் அவருக்குள் விளைந்த உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை எவ்வாறு பருக வேண்டும் என்பதை நாம் அறிதல் வேண்டும்
குண்டலினி யோகம் என்று சொல்லப்படும் ராஜ யோகம் அதை அவர்கள் நெற்றியிலே தொட்டுக் காட்டுவார்கள். தொட்டுக் காட்டியவரின் எண்ணத்திற்குச் சென்றபின் அவரில் விளைந்த உணர்வுகளே இங்கே விளைகின்றது.
ஆனால், நம் குருநாதர் காட்டிய உணர்வோ எம்மைப் பொட்டில் தொட்டுக் காட்டவில்லை. என் ஒவ்வொரு உணர்வுகளிலும் அவர் உணர்த்தும் உணர்வின் தன்மையைத் தொட வைத்தார்.
உணர்வின் இயக்கத்தைத் திசை திருப்பினார். தீமைகள் அகற்றிடும் உணர்வை எமக்குள் இணைத்தே காட்டினார்.
ஆகவே, அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு அவர் உடலிலே விளைவித்த உணர்வை எனக்குள் அவர் பதிவு செய்ததை அவரிடமிருந்து கண்டுனர்ந்த உணர்வின் தன்மையை நானும் கண்டுணரும்படி செய்தார்.
நீ எவ்வாறு அவைகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியபடி அவைகளை நானும் பார்க்க நேர்ந்தது.
X – Ray படம் எடுக்கப்படும் பொழுது அதனின் கதிர்கள் நம் உடலுக்குள் ஊடுருவி அந்த மிஷினில் வைக்கும் துடிப்பின் நிலைக்குத் தக்கவாறு அதனின் துடிப்பு ஒலி அலைகள் எவ்வளவு தூரம் ஊடுருவுகின்றதோ அதைப் படமாக எடுத்து தெளிவாகக் காட்டுகின்றது.
இதைப் போலத்தான் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள் கொண்டு என் எண்ணத்திற்குள் பதிவு செய்த அவரின் உணர்வுகள் அவரின் நினைவாற்றல் கொள்ளும் பொழுது X – Ray மாதிரி பிறிதொரு தீமைகளைப் பிளந்து தீமைகளை உருவாக்கிய தீமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைகளில் இருப்பினும் தீமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வைக் காணமுடிகின்றது.
அந்த உணர்வின் நிலைகள் மற்றதை எவ்வாறு மாற்றுகின்றது என்ற நிலையையும் அறிந்துணரச் செய்தார். அப்படி உணர்ந்த நிலைகள் கொண்டு குரு அருளின் தன்மையை அறிந்துணர முடிந்தது..
பின், இதைப் போல நுகர்ந்தறிந்த தீமைகள் பலவாறாக இருப்பினும் குரு அருளின் துணை கொண்டுதான் எனக்குள் தீமைகள் விளையாத வண்ணம் தடுக்க முடிந்தது
குருநாதர் காட்டிய அருள் வழியில் எனக்குள் விளைந்த தீமைகளைத் தடுத்திடும் அந்த உணர்வலைகள் இங்கே படர்ந்தாலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் அதிலே கலந்ததாலே அது செயலாக்கும் நிலைபடுகின்றது.
ஆகவே, யாம் உபதேசிக்கும் உணர்வுகளால் உங்களுக்குள் பல நன்மைகள் ஏற்படுகின்றது என்றால் “என்னால் அல்ல..”
குருநாதர் உணர்த்திய உணர்வின் தன்மை என் சொல் உணர்வுக்குள் கலந்து அந்த உணர்வின் ஆற்றல் படரப்படும் பொழுது புலனறிவால் நீங்கள் ஈர்த்திடும் உணர்வுகள் உங்களுக்குள் ஆழப் பதிந்து பதிந்த உணர்வே மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது குரு அருளின் தன்மையை அவர் கண்டுணர்ந்த பேராற்றல்மிக்க சக்தியை நாம் அனைவரும் காண முடியும்.
2 மெய்ஞானிகளுடன் ஒன்றும் பாதையை குருநாதர் தெளிவாகக் காட்டினார்
சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் உருவாக்கினாலும் இந்தப் பேரண்டத்தில் வந்த உணர்வின் துணை கொண்டுதான் ஒரு பிரபஞ்சமாக உருவாகின்றது.
பிரபஞ்சத்தில் உருவானதை ஒரு உயிரணு நுகர்ந்து உணர்வின் எண்ணங்கள் கொண்டு இயக்கும் தன்மை வந்து அதன் வழி கொண்டு மனிதனாக உருவாகின்றது.
மனிதனான பின் அகண்ட அண்டத்தில் பரவிக் கிடந்த உணர்வை தான் நுகர்ந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
அவர்கள் அகண்டு சென்று எந்த அண்டத்திலிருந்து நுகர்ந்ததனரோ அதன் வழி வழி தொடர்ந்து என்றும் அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
இந்தச் சூரியன் அழியலாம். ஆனால், மனித உயிர் இந்த உணர்வின் தன்மையைப் பெற்றுவிட்டால் என்றும் அழியா நிலைகள் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.
அந்த நிலை பெறுவதற்காகத் தான் ஞானிகள் அனைவரும் சென்றார்கள்.
அதிலே வீழ்ந்தவர்களும் ஏராளம். பின் அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தால் இன்று ஏங்கி இருப்போரும் ஏராளம்.
ஆனால், பாதை தவறிச் செய்து கொண்டிருப்போர் சாங்கியங்களைச் செய்துவிட்டு அதைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்போர் பலர்.
நூற்றுக்கு ஒன்று இரண்டு என்று கூடச் சொல்லலாம். “பத்து சதவீதம்” தேறுவது கூட மிகக் கடினம். இதை குருநாதர் தெளிவாகக் காட்டினார்.
பல இன்னல்கள் எப்படிச் சேருகின்றது? நுகர்ந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது? இதிலிருந்து நீ விடுபடும் மார்க்கங்கள் என்ன?
அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீ ஏங்கு. அதன் வலிமையை உனக்குள் சேர்த்துக் கொள். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உனக்குள் வளர்த்து அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வை நீ செலுத்து.
அவர்கள் வளர நீ அதைக் கண்டு மகிழ்ச்சி பெறு. அதன் நிலைகளே உனக்குள் வளரும்.
அதை நீ பெறுவாய். அனைவரையும் பெறச் செய்வாய் என்று குரு அருளை எமக்குள் பாய்ச்சிய நிலைகளைத் தான் உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன்.
இன்றைய செயல் நாளைய சரீரம். இன்று எந்த உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அடுத்து ஒளிச் சரீரம் பெறலாம்.
அதே சமயத்தில் இன்று வேதனை என்றால் வேதனையை உருவாக்கி அதைக் கொண்டு வேதனையை உணவாக உட்கொள்ளும் அந்தச் சரீரத்தைப் பெறலாம்.
ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு இன்று அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்ப்போம். நாளை ஒளியின் சரீரம் பெறுவோம்.
இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால், இந்த உடலின் துணை கொண்டு தான் நாம் சப்தரிஷி மண்டலம் செல்ல முடியும்.
எனவே இந்த உடலில் இருக்கும் பொழுதே நம் நினைவின் ஆற்றலை மகரிஷிகளின் பால் செலுத்தி அதன் வலிமையை நமக்குள் வளர்ப்போம். தீமைகள் நம்மை நாடாது தடுத்துக் கொள்வோம்.
மெய்ஞானிகளுடன் ஒன்றுவோம். அந்த மெய்ஞானிகளுடன் ஒன்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
முந்திச் செய்யத் தவறிய நிலைகளிலிருந்து நம் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.
கூட்டுத் தியானத்தின் மூலம் ஆயிரக்கணக்கோர் சேர்ந்த உணர்வுகளின் வலிமை கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்.
உடல் பெறும் உணர்வைக் கரையச் செய்வோம்.
அதன் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெறுவோம். அந்த அருள் ஞானத்தைப் பெறுவோம்.
அழியா ஒளியின் சரீரம் பெறுவோம் என்று உறுதி கொள்வோம்.
3 குருநாதர் எம்மைத் தேடி வந்துதான் சக்தியைக் கொடுத்தார் – அதை உங்களைத் தேடி வந்து கொடுக்கிறோம்
நன்மைகள் பல செய்யத் துணிவோம். நல்லது செய்வதற்கு நல்ல துணிவு வேண்டும்.
நீங்கள் நல்லதே செய்து கொண்டேயிருந்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?
நல்லது செய்யப் போகும்போது எத்தனை தொல்லைகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? உதவி மேல் உதவி செய்யப் போகும்பொழுது நல்லவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகிறார்கள்?
இதற்காக வேண்டி அந்த நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
நல்லவர்களைக் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அதற்குண்டான சக்தி வேண்டுமென்றுதான் குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.
நன்மைகள் செய்யப் போகும்போது நாம் எப்படி இருக்க வேண்டும்? அதற்குண்டான “மன வலு” வேண்டும். இல்லையென்றால் இந்த நன்மைகள் பலன் தராது.
ஆனால், அதற்கு வேண்டிய சக்தி நல்லவருக்கு வேண்டுமா..,? வேண்டாமா..,?
அதற்காகத்தான், யாம் உங்களுக்குப் பல முறை துருவ நட்சத்திரத்தைப் பற்றி திரும்பத் திரும்பச் சொல்லி இந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.
ஒரு முறை 1954ல் யாம் வேலையின் நிமித்தமாக அகமதாபாத் சென்றிருந்தோம். அங்கேயும் நம் குருநாதர் என்னைத் தேடி வந்தார்.
“எப்படி வந்தீர்கள்..,?” என்றேன்
“உன்னைப் பார்க்கத்தான்.., வந்தேன்” என்றார் குருநாதர். அங்கேயும் எம்மை “டீ”யைக் குடிக்கச் சொன்னார். அப்புறம் என்னென்னமோ சொன்னார்.
நான் அவரிடம் “ஏன் சாமி நீங்கள் அங்கே பழனியில் அல்லவா இருந்தீர்கள் இங்கே எப்படி வந்தீர்கள்? என்று கேட்டேன்.
“நான் சும்மாதான் வந்தேன்டா..,” என்றார். பின் சென்றுவிட்டார். ஆக, என்னைத் துரத்திக் கொண்டேதான் குருநாதர் வந்திருக்கின்றார்.
குருநாதர் என்னுடைய குணத்திற்கோ அல்லது என்னுடைய பூர்வ புண்ணியமோ தெரியாது. ஆனால், எம்மைத் தேடி வந்துதான் எனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தார். நான் உங்களைத் தேடி வந்து இதைச் சொல்கிறேன்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா?
என்னைத் தேடி வந்து குருநாதர் கொடுத்தார். அதே மாதிரி அந்த அருள் சக்திகளை உங்களைத் தேடி வந்து உங்களுக்கும் கொடுக்கின்றோம். உங்கள் தீமைகள் அகல வேண்டும் என்று சொல்கிறோம்.
ஏனென்றால், நன்மைகள் செய்யும் நிலைகளில் எவ்வாறு தீமைகள் வருகிறது? அதிலிருந்து உங்களைக் காக்க அந்தத் “துணிவு” வேண்டுமா இல்லையா?
அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு பேரருள் பேரொளி பெறவேண்டும் என்பதற்குத்தான் அருள் ஞானத்தைக் கொடுக்கிறோம், நல்லதைக் காத்திடும் சக்தியாக துருவ நட்சத்திரத்தைக் காட்டுகிறோம்.
உங்கள் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி அந்தச் சக்திகளை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ள முடியும்.
ஆகவே, உங்களுக்கு நன்மைகள் செய்யும் அந்தத் துணிவைக் கொடுக்கிறோம். எமது அருளாசிகள்.
4 உங்களை அறியாமல் உங்களுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் ஆற்றலைத்தான் (POWER) கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்
இன்று எத்தனையோ வகையான சிக்கல் நமக்குத் தெரியாமலே வருகிறது. அதாவது இன்றைய நாகரிகமான உலகத்தில் டி.வி.யைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
அதில் சங்கடமான நிலைகளில் இருந்தால் அந்த சோர்வான நிலைகளில் போய் எதையாவது ஒன்றை தொட்டால் கீழே விழுந்து உடைந்து போய்விடுகின்றது.
அப்படி உடைந்து போய்விட்டதென்றால் அதனால் சங்கடம். அந்த சங்கடத்தில் வருகிறோம். குழந்தை ஏதாவது குறும்புத்தனம் செய்தால் அவன் மீது இனம் புரியாத நிலைகளில் வெறுப்பு வரும்..
அந்த படத்தை நீங்கள் பாரத்துக் கொண்டே இருக்கின்றீர்கள். டி.வி.யைப் பாரத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
நீங்கள் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு சங்கடமான நிலைகளை உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள். உங்கள் வயிற்றில் என்னென்ன கோளாறு செய்கிறது என்று நீங்கள் உணரலாம்.
வேடிக்கைக்காகத்தான் நீங்கள் டி.வியைப் பார்க்கின்றீர்கள்.
ஆனால், உணர்ச்சிகள் உடனே உங்கள் உடலில் என்ன செய்கிறது என்பதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இன்றைய விஞ்ஞான அறிவால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. பார்க்கின்றீர்கள்.
அடுத்து நீங்கள் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா. ஒரு அரைமணி நேரம் பார்த்து முடிந்தாலும் கூட அது கெட்டது என்றால் உடனே நிறுத்திப் பழக வேண்டும்.
ஆனால். அந்தக் கெட்டதைத்தான் ரசித்துப் பார்ப்போம். இன்றைக்கு அதற்குத் தகுந்தாற் போல் காசு வாங்குகிறவர்களைப் பார்த்தோம் என்றால் ரொம்ப அசிங்கமான படங்களை வெளியிடுகின்றனர்.
அப்பொழுது இவர்கள் ரசனை அது மேல் போய்விடுகிறது. நல்ல குணங்களை இழந்து விடுகிறார்கள்.
ஏனென்றால், ஒரு பக்கம் இந்த விஞ்ஞான அறிவால் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு வழி இருந்தாலும், விஞ்ஞான அறிவால் மனித உறுப்புகளை உருவாக்கக்கூடிய நிலை இருந்தாலும், விஞ்ஞான அறிவால் ஒரு மனிதனை உருவாக்கக்கூடிய சக்தி இருந்தாலும், உடல்களில் உறுப்புகளை மாற்றி உடலைச் சீர்படுத்தினாலும், உடலை விட்டுப் போன பிற்பாடு ஆகும்?
எத்தனை அறிவு வந்தாலும் இந்த உயிர் இதில் எதைச் சேர்த்தோமோ அதற்குத் தக்கவாறு அடுத்த உடலை நிச்சயம் உருவாக்கியே தீரும்.
இந்த உயிர் எல்லாவற்றிலும் பல கோடி உடல்களில் தெரிந்து கொண்டதுதான் கார்த்திகேயா. அப்பொழுது தீமை என்று தெரிகிறது. தீமையை நீக்கியது துருவ நட்சத்திரம் என்றும் தெரிகின்றது.
அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறேன். உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பேறவேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்கலாம். இங்கே நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கிறது.
பதிவு செய்ததை எண்ணினால் கண் என்ன செய்கிறது? கண் இழுத்து நமக்குள் கொண்டு வந்து சுவாசித்து உயிரிலே படச் செய்கிறது. அப்பொழுது மனது தெளிவாகிறது.
அப்படித் தெளிவாக்கப்படும்போது என்ன செய்கிறது? உமிழ் நீராக மாறுகிறது.
உடனே நீங்கள் அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து என் இரத்தத்தில் கலக்க வேண்டும். என் இரத்தத்தில் ஜீவ அணுக்கள் அத்தனையும் பெற வேண்டும். உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.
அடுத்து, சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உடனே “மள.., மள...,” என்று எண்ணத்தைக் கொண்டு வந்து வீரியமான நிலைகளில் அந்த உறுப்புகளுக்குள் ஊட்டிவிட வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும். கல்லீரலை மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும், நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும், இரத்தத்ததைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த வலுவை ஏற்றிக் கொள்ள வேண்டும்.
கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இதைச் சுத்தப்படுத்த வேண்டும். எல்லாமே இதை சுத்தப்படுத்திவிடும்.
இது உங்களால் முடியும். ஒரு ஐந்து நிமிடத்திற்குள் எடுத்துக் கொள்ள முடியும்.
ஏனென்றால் எதையும் கேட்காமல் இருக்க முடியாது. பார்க்காமல் இருக்க முடியாது. கையில் அழுக்குப்பட்டால் எப்படித் துடைக்கின்றீர்களோ, கையைக் கழுவிக் கொள்கிறோமோ அதே மாதிரி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வலுவாகத் துடைத்துப் பழக வேண்டும்.
நம்மால் முடியும். பழகிக் கொண்டால் தன்னாலே வந்துவிடும்.
சில பேர் என்னா செய்கிறார்கள்? ஆசையை அதிகமாக வைத்துவிடுகின்றார்கள். “இதையும் செய்தேனே.., போக மாட்டேன் என்கிறது, போகமாட்டேன் என்கிறது என்னால் மாற்ற முடியவில்லை.., என்னால் மாற்ற முடியவில்லை..,” என்று அதற்குத்தான் ஜீவன் கொடுத்து விடுகின்றார்கள்.
பாலில் விஷம் பட்டாலும் அது விஷத்தினுடைய செயல்தான். விஷத்தில் பாலைப் போட்டாலும் அதுதான்.
அந்த அருள் ஞானத்தின் உணர்வைத் தெளிவாக்கி நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள விஷத்தை நீக்க முடியும். நம்மால் பெற முடியும் என்ற அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.
தீமைகள் நமக்குள் புகாது தடுக்க முடியும். இந்த வாழ்க்கையில் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். அது தான் நமது எல்லை என்ற நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.
இப்பொழுது தியானப் பயிற்சி கொடுப்பதை நீங்கள் ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப்போகும் போதும், அதிகாலையிலும் எழுந்து 5-30மணிக்குள் செய்யலாம். ஒரு அரை மணி நேரமாவது செய்யுங்கள்.
எப்பொழுது கஷ்டமான வார்த்தைகளைக் கேட்டாலும் உடனே அது நமக்குள் வலுப் பெறாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும். நம் ஆன்மாவை விட்டுத் தீமைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணில் ஏங்கி எங்கள் இரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று அதை இணைத்துவிட வேண்டும்.
அது வேகமாக இழுக்கும். இழுக்கும்போது விஷத்தின் தன்மை உள்ளுக்குள் போகாமல் தள்ளிவிடும். இப்படிச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் ரோட்டில் போய்க் கொண்டிருக்கின்றோம் மிளகாய் வத்தல் தூவிக் கொண்டிருக்கின்றார்கள். நம் துணியின் மேல் படுகிறது. அந்தத் துணியை எடுத்து முகத்தைத் துடைத்தால் என்ன ஆகும்? எரிச்சலாகும் அல்லவா?
அங்கே நாம் நிற்கின்றோம். மிளகாய்த் தூள் வந்தது என்று தெரிகிறது. .நாம் தண்ணீரில் போட்டு துணியை அலச வேண்டுமா இல்லையா?
அதே மாதிரி ஒரு பக்கம் கெட்ட வாசனை மாதிரி காற்றிலே வருகிறது. நம் துணியின் மீது படுகின்றது. இதிலே வடிகட்டுகிறது. அப்புறம் துணியை நுகர்ந்து பாரத்தால் கெட்ட வாசனைதான் வருகிறது.
அதை நாம் துடைக்க வேண்டுமா இல்லையா?
நாம் தப்புப் பண்ணவில்லை. அங்கே சென்றோம், அது நம் மீது படுகின்றது. இப்படி நாம் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் இந்த மாதிரி எல்லாம் வந்துவிடுகிறது.
அதை நாம் துடைக்க வேண்டுமா இல்லையா? அதற்குத்தான் உங்களுக்குத் தீமையை நீக்கிடும் இந்தப் பவரைக் கொடுக்கின்றோம்.
5 உங்களுக்குக் காசு எதற்காகக் கொடுக்கின்றேன்?
உங்களுக்குத் தியானத்தில் சக்தி கொடுக்கின்றோம்.
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் சக்தியை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.
நமது பூமிக்கு நேராக இருப்பதனால் கவரப்பட்டு பூமிக்குள் பரவச் செகின்றது. அந்த நேரத்தில் நீங்கள் ஆசைப்படுவது எப்படி இருக்க வேண்டும்?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அதிகாலை 4.30 லிருந்து 6.00 மணிக்குள் ஏங்கி எடுக்க வேண்டும்.
ஆசீர்வாதம் செய்யும்போது உங்களுக்குக் காசு கொடுக்கின்றேன் அல்லவா. எதற்காகக் கொடுக்கின்றேன்? அதிலே சக்தி ஏற்றி வைத்திருக்கின்றேன்.
உங்களுக்கு அருளும் வேண்டும், பொருளும் வேண்டும், நல்ல ஞானமும் வேண்டும் என்று எண்ணித்தான் காசைக் கொடுக்கின்றேன்.
அந்தக் காசை எங்கே வைக்கச் சொல்கின்றேன்? விநாயகர் படத்திலே வைக்கச் சொல்கிறேன்.
விநாயகர் படத்தில் வைத்து அதிலிருக்கக்கூடிய சக்தியை அதிகாலையில் எழுந்தவுடன் அதைப் பார்த்து “ஈஸ்வரா” என்று உங்கள் உயிரை எண்ணிப் பழக வேண்டும்.
உயிரை எண்ணி உங்கள் அம்மா அப்பாவை நினைத்து அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் என்று அந்தப் படத்திற்கு முன்னாடி நின்று ஏங்குங்கள்.
நீங்கள் சரியான முறையில் கவனித்துப் பார்த்தால் அந்த விநாயகர் படத்திலிருந்து ஒரு வெளிச்சம் வருவது உங்களுக்கு நன்றாகவே தெரியும் அப்பொழுது நீங்கள் அதை நுகரும்போது உங்கள் மனதுக்கு நன்றாக இருக்கும்.
இதை நீங்கள் செய்யுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்கிறோம். இதை மாதிரி நீங்கள் காலையில் எடுத்து ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடமாவது துருவ தியானம் செய்யுங்கள்.
துருவ நட்சத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், இரத்த நாளங்கள் முழுவதும் படரவேண்டும், ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று உங்கள் நினைவினை உடலுக்குள் செலுத்துங்கள்.
இப்படி அதைச் செலுத்திப் பழகுங்கள். செலுத்திக் கொஞ்ச நேரம் இருந்தீர்கள் என்றால் உங்கள் மனதில் ஒரு நிம்மதி வருவதைப் பார்க்கலாம்.
அந்தச் சமயத்தில் விநாயகர் படத்திற்கு முன்னாடி பாலையோ அல்லது ஒரு பச்சைத் தண்ணீரையோ வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.
எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று எண்ணுங்கள்.
வீட்டில் குழந்தைக்கோ அல்லது யாருக்காவது உடல் நிலை சரியில்லாது இருந்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும் அவர் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கவேண்டும், அவர்கள் உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.
அந்த விநாயகர் படத்தையே பாருங்கள். இப்பொழுது உங்கள் உடலுக்குள் “ஒரு விதமான சக்தி..,” வரும். அந்த சக்தியை வைத்து உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற நிலையில் உணர்வைப் பாய்ச்சுங்கள்.
அதற்குத்தான் உங்களுக்குக் “காசு கொடுப்பது.” அதை வைத்து நன்றாக உற்றுப் பாருங்கள்.
படத்திற்கு முன்னாடி வைத்த தண்ணீரில் இரண்டு துளசியை எடுத்துப் போட்டு அந்தத் தீர்த்ததை எடுத்து உடல் நன்றாக வேண்டும் என்று எண்ணி உடம்பு சரியில்லாதவருக்குக் கொடுங்கள்.
அதே மாதிரி டாக்டரிடம் சென்று மருந்து வாங்கிச் சாப்பிட்டாலும் இதே போல மேலே சொன்ன மாதிரி கொஞ்ச நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு மருந்தை உட்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
நம்பிக்கையுடன் செய்தீர்கள் என்றால் இதை நீங்கள் உஙகள் எண்ணத்தால் தீமைகள் விலகுவதை அனுபவத்தில் பார்க்கலாம்.
“உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று இதைத்தான் உங்களுக்குப் பல முறை உபதேசம் செய்கின்றேன். செய்து பாருங்கள்.
6 ஏட்டிலும் இல்லை, எந்தப் பாட்டிலும் இல்லை, உங்கள் கூட்டிலும் இல்லை
அன்று ஞானிகள் காவியமாகக் கொடுத்ததை அரசர்கள் காட்டிய நிலைகள் அந்தக் காவியங்களை எழுத்து வடிவுக்கு வரும் போது அது தான் உண்மை என்றும் அதிலே செய்யும் சாங்கியங்களையும் சாஸ்திரங்களையும் செய்து விட்டால் கடவுள் காப்பாற்றுவான் என்றுதான் இன்று இருக்கின்றோம் அல்லவா.
ஆனால், சாங்கியத்தினாலும் சாஸ்திரங்களாலும் “கடவுள் நம்மைக் காக்க மாட்டான்.., காண மாட்டோம்..,” என்ற நிலையை நமது குருநாதர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
இந்த உயிர் எவ்வாறு மனிதனாக உருவாக்கியதோ அவன் தன் உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான், உண்மையான சாஸ்திரம் இது.
அந்த அருளைப் பெறுவதற்குத்தான் ஆற்றங்கரையில் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள். உடல் அழுக்கைப் போக்கித் துணி அழுக்கைப் போக்கிக் கரையேறி வந்தபின் நம்மைக் கிழக்கே பார்க்கும் படி வானை நோக்கி ஏகி அந்தக் கதிரவனின் உணர்வின் ஆற்றலை அதைப் பெறவேண்டும் என்று ஏங்கச் செய்தனர்.
கண்களை மூடித் தன் உடலுக்குள் அதை வலுவேற்றிய பின் அந்தத் தத்துவ ஞானிகள் காட்டிய வழியில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசா.., கணேசா.., என்று நம் உயிரிடம் வேண்டும்படி வைத்தார்கள் ஞானிகள். ஏங்கியபின் தன்னைச் சிந்தித்துப் பார்க்கும் படி செய்தார்கள்.
எனது உயிர் தோன்றியதிலிருந்து புல்லைத் தின்று தழைத் தாம்புகளைத் தின்று கனி வர்க்கங்களைத் தின்று இன்று சுவை மிக்க நிலைகள் படைத்துச் சாப்பிடும் இந்த உடலைக் கொடுத்தது இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்த அந்த ஈசனை வணங்கும்படிச் செய்தார்கள் ஞானிகள்.
அந்த ஞானிகள் காட்டிய காவியத்தைத் தனக்குள் பதிவு செய்வதற்கு படிப்பறிவு இல்லாத அக்காலங்களில் சிலைகளை உருவமாக்கிக் கதைகளாகச் சொல்லியுள்ளார்கள்.
இந்த உயிர் உன்னை மனிதனாக எவ்வாறு உருவாக்கியது? என்று எழுத்தறிவு இல்லாத காலங்களில் சிலையை உருவாக்கி அந்தச் சிலையின் ரூபமாகக் காவியமாக கதைகளாகச் சொல்லி மனிதனின் வாழ்க்கையில் பதிவு செய்தான்.
இதைத்தான் எமது குருநாதரும் என்னிடம் சொன்னார். எனக்குள் பதிவு செய்தார். இது ஏட்டில் இல்லை. யாம் சொல்லும் இந்த நிலைகள் பாட்டிலும் இல்லை. ஆக, உங்கள் கூட்டிலும் இல்லை.
அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகரவேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் அருள் உனர்வுகள் உங்கள் கூட்டிற்குள் பதியச் செய்யவேதான் இதை உபதேசிக்கின்றேன்.
நீங்கள் யார்? இந்தப் பிள்ளை யார்? என்று கேள்விக் குறியின் நிலைகளில் அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்யவே இதைச் செய்கின்றோம்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் கூட்டிற்குள் வந்துவிட்டால் பின் ஏட்டிலே ஏறுவதற்கு உங்கள் சிந்தனைகளும் செயல்களும் இந்த அறிவின் ஞானம் பெற்ற நிலைகள் கல்வியின் ஞானம் பெற்றாலும் இதை அனுபவத்தில் வரப்படும் போது எழுத்து வடிவிலும் கொண்டு வரலாம். பிறருக்குப் போதிக்கவும் செய்யலாம். பேருண்மைகளை உணர்த்தவும் செய்யலாம்.
7 சூட்சமத்தில் (கண்ணுக்குப் புலப்படாமல்) இயங்கும் நிலைகளைக் காணச் செய்தார், உணரச் செய்தார் குருநாதர் - ஞானக்கண்
கர்ப்பமாக இருக்கும் ஒரு தாயை எடுத்துக் கொண்டால் கருவுற்ற தொண்ணூறு நாட்களுக்குள் அந்தத் தாய் எடுக்கும் உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.
பொதுவாக பெண்கள் இரக்கமும் பண்பும் கொண்டவர்கள்.
பிறர்படும் நோயினை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே..,” என்ற எண்ணத்தில் சிலர் (கர்ப்பமான தாய்) நுகர்ந்துவிட்டால் அதைத் தன் உடலுக்குள் பரப்பி கருவிலிருக்ககூடிய சிசுவிற்கும் இத்தகைய உணர்வுகள் கலந்துவிடுகின்றது.
இன்று பல அணுக்களின் கருக்களை விஞ்ஞான அறிவுப்படி இணை சேர்த்து புதுப் புது செடிகளை எப்படி உருவாக்குகின்றனரோ இதைப் போல (தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்) அது தாயின் கருவிற்குள் உருப்பெற்றுவிடுகின்றது.
ஒரு வீரியம் குறைந்த செடியில் வீரியமுள்ள செடியின் அணுக்களை நாம் எடுத்து அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது வீரியம் குறைந்த செடியும் வீரியமான செடியாக உருவாகின்றது.
இது மனிதனால் இணைக்கச் செய்யப்பட்ட நிலைகள், அது வீரியமான செடியாக உருவாகின்றது
இதைப் போன்றுதான் தாய் கருவிலே சிசு வளரப்படும் பொழுது பல கொடிய நோய்களையோ, அல்லது துன்புறுத்தும் நிலைகளையோ, சண்டை போடும் நிலைகளையோ எதையெல்லாம் தாய் நுகர்கின்றதோ அந்த உணர்வின் அணுக்கள் கருவிலிருக்கக்கூடிய அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் சிசுவில் அது பதிந்துவிடுகின்றது.
இப்படிப் பதிந்து கொண்டபின் அதனுடைய வளர்ச்சியில் வரப்படும் பொழுது, தாயிற்குத் தான் பார்த்தது “ஊழ்வினை ஆகின்றது”. குழந்தைக்கோ அது “பூர்வ புண்ணியம் ஆகின்றது”.
இவ்வாறு கருவிலே விளைந்துவிட்டால் கருவில் உருவான குழந்தையும் அந்த உணர்வின் தன்மை இயங்கப்படும் பொழுது அந்த உணர்ச்சியை அதிகமாகக் கூட்டிவிடுகின்றது.
தாய் உற்று பார்த்தவர்கள் எந்தெந்த நோய்வாய்ப்பட்டனரோ அதைப் போல இவர்கள் சுணங்கிவிடுவதும் சண்டையிட்டவரைப் பார்த்திருந்தால் அதே உணர்வுகள் இனம் புரியாதபடி தான் வெறுப்படைவதும் சண்டை போடுவதும் இந்தக் கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது அந்தத் தாயிற்கு இனம் புரியாத இன்னலும் இனம் புரியாத சங்கடமும், இனம் புரியாத வருத்தமும் வரும்.
சில குழந்தைகளில் இப்படி ஆகும்.
ஏனென்றால், சில உணர்வுகள் பதிந்து கொண்டபின் அதன் உணர்வின் அணுக்கள் அந்த வளர்ச்சியைப் பெறும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தி தாய் வழி அது பெறும் தகுதி பெறுகின்றது.
முதலிலே பதிந்தது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது. தாய் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாகின்றது. ஒரு உணர்வின் தன்மை வித்தாகி வித்தின் தன்மை கொண்டு அது வளர்கின்றது.
இதைப் போன்று “சூட்சம நிலைகளில்” பல நிலைகள் மாறிக் கொண்டேயுள்ளது. எவ்வாறெல்லாம் இது நடக்கின்றது என்ற நிலையை நம் குருநாதர் காட்டினார்.
பல உண்மையின் உணர்வுகளை அலைகளாக எப்படிப் படர்கின்றது? அது நுகரும் தன்மைகள் உடலுக்குள் எப்படி ஊடுருவுகின்றது? என்ற நிலையையும் காட்டினார்.
இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு கேமராவை வைத்து நம் உடல் உறுப்புகளையும் உடலின் இயக்கங்களையும் இன்று காணுகின்றனர்.
இதைப் போல குருவின் உணர்வின் துணை கொண்டு இந்த உணர்வுகள்
“எனக்குள் அதைப் பாய்ச்சி..,
குருநாதருக்குள் அதைப் பாய்ச்சி..,
என்னை நீ பார்..,
எனக்குள் அது எப்படி இயங்குகின்றது?
உணர்வின் செயலாக்கங்கள் அணுக்கள் எப்படி மாறுகின்றது?” என்ற நிலையைக் காட்டினார்.
அதைப் போல் எனக்குள் பாய்ச்சி இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி மாறுகின்றது? இந்த எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றது என்ற நிலையும் முறைப்படுத்திக் காட்டினார்.
இயற்கையின் நியதிகளை குருநாதர் எமக்குக் காட்டியதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதைச் சொல்கிறோம்.
8 எனது வேலை - கடவுளை நான் எங்கேயும் தேடவில்லை, உங்களைத் தான் கடவுளாக்குகின்றேன்
நீங்கள் சும்மா ஒரு பக்கத்தில் உட்கார்ந்து பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களுக்கு. உங்கள் மனதில் என்னென்ன உணர்வுகள் நினைவலைகள் ஓடுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
வெறுப்பாகச் சொன்னவர்கள், சண்டை போட்டவர்கள், இடைஞ்சல் செய்தவர்கள், இவர்களைப் பற்றியெல்லாம் நினைப்பு தொடர்ச்சியாக வரும்.
நினைக்காமல் உட்கார்ந்து பாருங்கள். என்னென்ன சிந்தனைகள் வருகின்றது என்று..,?
எனக்கு அவன் இந்த மாதிரி இடைஞ்சல் செய்தான், நான் அவனுக்கு இவ்வளவு உதவி செய்தேன் அவன் இப்படிப் பண்ணுகின்றான், கடன் வாங்கியவன் காசைத் தர மாட்டேன் என்கிறான், வீட்டில் இப்படியெல்லாம் என்னைப் பேசுகின்றார்கள்.., இப்படி நடந்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது? என்ற புலம்பல் தன்னாலே (உங்களுக்குள்) வரும்.
ஏனென்றால், இப்பொழுது தானே புதிதாக இந்தத் தியானத்தைச் செய்கின்றோம். இதற்கு முன்னால் எத்தனயோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அது அது அந்த அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
அவ்வப்பொழுது இந்த உணர்வுகள் தோன்றினாலும் அப்பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
சந்தர்ப்பத்தால் சட்டையில் அழுக்குப் பட்டால் அதனின் நிலைகள் தெரிவதில்லை.
இதைப் போன்று தான் உங்கள் உயர்ந்த குணங்கள் ஒவ்வொன்றிலும் மறைத்திருக்கும் இத்தகையை தீமைகளை நீக்குவதற்கு மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆனால், யாம் பதிய வைத்த உணர்வை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்த எண்ணத்தில் இருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு “இப்படி ஆகிவிட்டதே..,” என்று வேதனையாக எண்ணவே கூடாது. வேதனை என்பதே விஷம்.
உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று குருநாதர் இட்ட கட்டளைப்படி சதா நான் தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.
நீங்கள் “கதவை மூடிவிட்டால்..,” என்ன செய்வது? நீங்கள் கதவை அடைத்துவிட்டு எங்கேயோ போய்விட்டீர்கள் என்றால் உள்ளுக்குள் வர முடியாதே.
நான் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பரப்பிக் கொண்டேயிருக்கின்றேன். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்த எண்ணத்தில் இருந்தால் அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.
ஆகையினால், எனது வேலை “கடவுளை, நான் எங்கேயும் தேடவில்லை....” உங்கள் உயிரைத்தான் கடவுளாக்கச் சொன்னார் குருநாதர்.
அவன் அமைத்த கோட்டை உங்கள் உடல் என்றும் பல ஆயிரம் ஆண்டுகள் இதனின் உணர்வுகளைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கியுள்ளது என்று உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன்.
அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து இந்த மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆராதனை செய்கின்றேன்.
தெளிந்து கொண்ட அறிவு கார்த்திகேயா என்று தெரிந்து கொண்ட இந்த அறிவின் தன்மை கொண்டு நீங்கள் அருள் ஞானிகளாக மெய் ஞானிகளாக உலகைக் காக்கும் அரும் பெரும் சக்திகளாக உருவாக வேண்டும் என்று விரும்புகின்றேன்.
இது தான் என்னுடைய தவம்.
9 பண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி அருளை வளர்த்து மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்வதே நம் குரு காட்டிய அருள் வழி
இன்றைக்கு எடுத்துக் கொண்டால் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்குப் போனாலே அதற்குள் “அங்கிருந்து இங்கே வந்துவிட்டான்..,” என்ற நிலை வருகிறது.
மைசூருக்கு இங்கிருந்து தமிழ்நாட்டுக்காரன் அங்கே சென்றால் உதைக்கிற மாதிரி ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் சென்றால் “எங்கே இருந்து இங்கே வந்து நாட்டாமை செய்கிறான் பார்..,” என்பார்கள்.
தமிழ்நாட்டுக்காரர்கள் அங்கே சென்றால் உதைக்கின்றார்கள், தமிழ்நாட்டுக்குப் போ என்கிறார்கள். பகைமை உணர்வுதான் வருகிறது.
தமிழ்நாடுதான் என்றாலும் ஒரு கிராமத்திற்குச் சென்றால் என்ன ஆகிறது? அந்தக் கிராமத்துக்காரன் இங்கே வந்துவிட்டான், அவன் கொழுப்பைப் பார் என்கிறார்கள்.
ஆக, இப்படி ஒரு கிராமத்திற்கு கிராமம் தனித்து நிற்கும் நிலையும் பகைமை ஊட்டும் நிலைகள் இப்படி உலகம் முழுவதுமே இருக்கின்றது.
இனிமேல் அணுகுண்டு விழ வேண்டியதில்லை. மனிதனுக்குள் இருக்கும் விஷத்தன்மை விளைந்தால் இவர்களுடைய உணர்வே மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் நிலை வரூகிறது.
மனிதன் என்ற நிலைகளில் எத்தனையோ ஆலயங்கள், சாஸ்திரங்கள், சட்டங்கள் இருக்கிறது. இருந்தாலும் உலகம் முழுவதற்குமே இன பேதம், மொழி பேதம், மன பேதம் இருக்கிறது.
மக்களை ஒன்றுபடுத்த அரசாங்கமும் எத்தனையோ வேலைகளைச் செய்கிறது. அரசாங்கம் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், மக்களுடைய நிலைகள் கொண்டுதான் அரசாங்கம்.
மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று அரசாங்கம் எண்ணினாலும் கிராமத்திற்கு கிராமம் தகராறு ஏற்படுகிறது. மக்கள் (நாம்) ஒற்றுமையாக இல்லையென்றால் அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது.
அதே சமயத்தில், கிராமப்புறத்தில் தெய்வங்களை வணங்கும் பொழுதும் எங்கள் இனம் அது அவர்கள் இனம் என்ற நிலையில் நாம் பகைமை கொள்கிறோம்.
ஆக, இந்த மனித உடலில் விளைய வைத்த தீமையின் உணர்வின் எண்ண அலைகள் உலகம் முழுவதும் பரவி அணுக்களாக மாறுகின்றன.
தீமையான உணர்வுகளை விளைய வைக்கும் இந்த நிலைகள் அனைத்தும் வெளிப்பட்ட நிலைகளில் இந்த ஜீவ அணுக்கள் பட்டு அந்த உயிரின் தன்மை கொண்டு மீண்டும் அது புழுக்களாக மாறுகின்றது.
அந்த உணர்வின் அணுக்கள் வரும்போது அதனுடைய நிலைகள் கொண்டு தாவர இனங்கள் உலகெங்கிலும் அழிகின்றது. இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
பகைமையான உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. விளைந்த இந்தத் தீமையான நிலைகள்தான் அணுக்களாக மாறி நம்மையே திருப்பித் தாக்குகின்றது. உணவுக்காகத் திண்டாடும் நிலை கூட சில நாடுகளில் இருக்கின்றார்கள்.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீண்டிடல் வேண்டும், மற்றவர்களையும் மீட்டிடல் வேண்டும்.
ஆகவே, எந்த கிராமமாக இருந்தாலும் ஒரே கிராமம் என்று நாம் எண்ணவேண்டும். எந்த ஊரானாலும் மைசூர் வேறு இல்லை, ஆந்திரா வேறு இல்லை, உலகம் வேறு இல்லை.
அங்கே நாம் செல்ல வேண்டும் என்றால் “நட்பு இருந்தால்தான்..,” போக முடியும். நட்பு இல்லையென்றால் அங்கே போக முடியாது.
அவர்கள் வாழவேண்டும் என்று எண்ணினால்தான் நாம் வாழ முடியும். இல்லை இல்லை.., அவர்களைத் தொலைக்க வேண்டும் என்று நாம் எண்ணினால், நாம் போனால் நிச்சயம் நம்மைத் தொலைக்கத்தான் செய்வார்கள்.
இந்த உலகம் நமக்குள் அந்த எண்ணமே நம்மைத் தொலைத்து விடுகிறது.., தொலைந்து விடுகிறோம்.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த ஊர்; இந்த உலகம்; நாம் எல்லோருமே ஒரே குடும்பம், ஒரே இனம்.
அதாவது, உலகம் அனைத்தும் அதில் வாழும் நாம் அனைவரும் அந்தக் கடவுளின் பிள்ளைகள்தான். அவர்களுடன் நாம் இணைந்து வாழக்கூடியவர்கள் என்ற நிலையில் நாம் எண்ணவேண்டும்.
மதமும் இல்லை, மொழியும் இல்லை, இனமும் இல்லை. இவைகள் எல்லாம் நம்மைக் காப்பதே இல்லை.
ஊரும் உலகமும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் “நலம்” என்ற உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.
ஆக, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோர் மீதும் படரவேண்டும். நாம் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். எல்லோரும் சகோதர உணர்வுடன் ஒன்று பட்டு வாழ்ந்திடவேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நாம் படரச் செய்யவேண்டும். இதுதான் “தவம்” என்பது.
பண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி, அருளை வளர்த்து மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்வதே நம் குரு காட்டிய அருள் வழி.
அருள் வழி வாழுங்கள். ஆனந்த வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். அதன் வழி கொண்டு பேரின்ப பெரு வாழ்வாக நீங்கள் வாழ்ந்திட எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எமது அருளாசிகள்.
10 யாம் கொடுக்கும் தீமையை நீக்கும் பயிற்சிக்குக் காசு பணம் எதுவும் தேவையில்லை
இன்று இருக்கக்கூடிய உலகில் மீண்டும் மனித உடல் பெறுவோமா..? என்ற சந்தேகம் கூட வந்துவிட்டது.
ஒரு உயிரணுவின் தன்மையை எடுத்துக் கொண்டபின் அந்த கருமுட்டைக்குள் இருக்கக்கூடிய உயிரணு என்ன செய்கின்றது என்று எலெக்ட்ரானிக் முறைப்படுத்தி அந்த அதிர்வுகளைக் கொடுத்து அது என்ன செய்கின்றது என்று பார்க்கின்றார்கள்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அதைச் செய்து பார்க்கின்றனர்.
இதே மாதிரி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை அதை எடுத்துக் கொண்டு அந்த உயிராத்மா தனியாக என்ன செய்கின்றது என்ற வகையில் ஒரு உடலுக்குள் இல்லாத நிலையில் தனித்திருப்பதைப் பிரித்துப் பார்த்து விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்துகின்றார்கள்.
இந்த நிலைகளை நம் பூமியில் வாழ்ந்த மெய்ஞானிகள் ஏற்கனவே சொல்லியுள்ளார்கள். அதை யாரும் சிந்திக்கவில்லை. இராமாயாணம், மகாபாரதம், கந்த புராணம் இவைகளில் அதைத்தான் சொல்லியுள்ளார்கள்.
ஆனால், அதையெல்லாம் சாமியாக (கடவுளாக) நினைத்துவிட்டார்களே தவிர அதில் அனைத்து நிலைகளும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
கோவிலில் காசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் அவன் பார்த்துக் கொள்வான் என்று தான் இன்று எண்ணிச் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆக, தீமையை நீக்கிடும் உணர்வை வளர்த்தால் “நம் உயிரான.., இவன் பார்த்துக் கொள்வான்..,” என்ற நிலைக்கு வர வேண்டும். இதை எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த எதிர்காலம் மிகக் கடினமான காலமாக வந்து கொண்டிருக்கின்றது. அதிலே விஷத்தின் தன்மை எண்ணத்தால் எடுத்தால் உடனே நமக்குள் வந்துவிடும்.
அதை மாற்ற உடனே ஆத்ம சுத்தி எடுத்துக் கொண்டு இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும். இந்த உலக உணர்வுகள் அனைத்தும் நமக்குள் நலமாகும் உணர்வே பெறுவோம்.
ஆகவே நமக்குள் தீமைகள் பெருகாது. தீமைகள் நமக்குள் புகாத நிலை ஆகிவிடும். இதைப் போன்று செய்து பழகிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டல அலைகளை எடுத்து உந்தித் தள்ளினால் அவர்கள் எல்லோரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சப்தரிஷி என்ற நிலை ஆகிவிடுகின்றார்கள்.
அவர்களை விண் செலுத்திய நிலையில் அந்த உணர்வுகளை எடுத்தால் எளிதில் நீங்கள் அதைப் பெற முடியும். குடும்பத்தில் எத்தனை பெரிய சிக்கல் வந்தாலும் மாற்றிக் கொள்ளும் சக்தி இருக்கின்றது.
அதே சமயத்தில் இதை நீங்கள் இந்த ஆத்ம சுத்தியை எடுத்து வந்தால் தன்னாலேயே அந்த “ஞானம்” வரும். அது எதைச் செய்வது எப்படிச் செய்வது என்ற மன வலிமை கிடைக்கும். சிந்தித்துச் செயல்படும் தன்மை கிடைக்கும்.
சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். தன்னாலே அந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யத் தொடங்கும். இதில் ஒன்றும் சிரமமில்லை.
ஒரு தையல் வேலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று போனால் முதலில் கோணலாகப் போகும். பிறகு கற்றுக் கொண்டபின் என்ன செய்கின்றது? ஒழுங்காக வந்துவிடுகின்றது.
இதே மாதிரி நீங்கள் எண்ணும்போது உங்கள் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் இந்த ஆன்மாவிற்குள் வரும் பொழுது பல திசைகளில் திருப்பும்.
ஆனால், நீங்கள் இதை மாற்றிச் செய்து பாருங்கள். இதைச் செய்யக் “காசா.., பணமா..?” ஒன்றும் தேவை இல்லை.
இடைஞ்சல் வரும் பொழுது இடைஞ்சலை நீக்குவதற்கு ஒரு சக்தியும் கொடுத்து உங்களுக்கு நான் ஒரு பிரார்த்தனையும் செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எப்பொழுதும் நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணி இதை இயக்கிக் கொண்டே இருக்கின்றேன்.
நீங்கள் அந்த நேரத்தில் எடுத்தால் தானே அந்தச் சக்தி உங்களுக்குள் இணையும்.
இதற்கு நேரமில்லை.., இது ஒரு சிரமம் என்று சொல்லிக் கொண்டு “சாமியிடம் கேட்டோம், சாமி சரியாகும்…, என்று சொன்னார், ஆனால் எங்கே நடந்தது..?”
“நடக்கவில்லை, சாமியாவது…, பூதமாவது…,” என்று எம்மையும் பேசுகின்றார்கள்.
சாமியிடம் போய் என்ன ஆனது என்று கேட்கின்றார்கள். அவர்கள் ஆசையைத்தான் பெருக்கப் பார்க்கின்றார்கள்.
ஆக, நடக்கவில்லை என்று எம்மைத் திட்டுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் இதைச் சொல்கின்றார்கள்.
ஏனென்றால், முதலில் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுத்து நலமாக்கிக் கொண்டு தான் வந்தேன். இப்பொழுது உங்களாலேயே உங்களை நலமாக்க முடியும் என்ற உணர்வைக் கொண்டு வருகின்றேன்.
அதன் வழியில் உங்கள் தீமைகளையும் நோய்களையும் நீங்கள் நீக்கிக் கொள்ள முடியும். இப்பொழுது யாம் கொடுக்கும் இந்த வாக்கினை ஆசீர்வாதமாக ஏற்று மன உறுதி கொண்டு உங்கள் வாழ்க்கையை வழி நடத்த இது உதவும்.
எந்த அளவிற்குத் தீமையை நீக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் திறன் கொண்டு வருகின்றீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் அதைப் பெறுகின்றீர்கள். தீமைகளிலிருந்து விடுபடுகின்றீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் அருள் வழியில் வாழ இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்குக் காசு பணம் எதுவும் வேண்டியதில்லை. ஆத்ம சுத்தி செய்யுங்கள். உங்களால் நிச்சயம் முடியும்.
11 குருநாதர் ஒளியான உணர்வு காற்றில் பரவியுள்ளது அதை நாம் பெறுதல் வேண்டும்
நாம் இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளைப் பிளத்தல் வேண்டும்.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்தார். அதை நினைவு கொள் அதிலிருந்து அருள் ஒளி வந்து கொண்டிருக்கின்றது.
அதை நீ எப்பொழுதெல்லாம் நினைக்கின்றாயோ தீமைகளை நீக்கும் சக்தி பெறுகின்றாய், உனக்குள் அது பேரருள் பேரொளியாகப் பெருகுகின்றது. இதை நீ பழகிக் கொள் என்றார்.
ஆக, உன்னுடைய தீமைகளை நான் துடைக்க முடியாது, நீ தான் துடைத்துக் கொள்ள வேண்டும்.
நான் இன்று தீமைகளைத் துடைத்து விட்டுப் போகின்றேன். நாளைக்கு வரக்கூடிய தீமைகளை யார் துடைப்பது?
இன்று உடலில் இருக்கின்றேன், போய்விடுகின்றேன். சிறிது நாள் உடலில் வாழ்கிறேன், பிறகு போய்விடுகின்றேன். இந்த உடல் சதமில்லையே. சொல்கிறார் குருநாதர் (உடலுடன் குரு இருக்கும் போது).
அவனோடு (உயிருடன்) சதமாயிருப்பதற்காக வேண்டி நான் போய்விடுகின்றேன். நீ என்ன செய்யப் போகிறாய்? என்று இப்படி வினா எழுப்புகின்றார்.
நான் அங்கிருந்து (சப்தரிஷி மண்டலத்திலிருந்து) இங்கே வந்து உன் தீமைகளைத் துடைப்பேனா?
எனக்குள் விளைந்த உணர்வுகள் நான் அழிவதில்லை. இருளை ஒளியாக்கினேன். ஒளியின் உணர்வு இங்கே பரவுகின்றது. அதை நீ எடுத்துப் பழகிக் கொள் என்றார் குருநாதர்.
உன் தீமைகளை அகற்ற முடியும், உணர்வினை ஒளியாக்க முடியும் என்றார். குரு அருள் எமக்குள் “திரு அருளாக” நின்று வழி காட்டியது.
நம் குரு காட்டிய அருள் வழியில் நாம் சென்றால் எளிதில் விண் செல்லலாம். பேரின்ப பெருவாழ்வு என்ற வாழ்க்கை வாழ முடியும்.
12 விண் செல்லும் மார்க்கத்தை உங்களுக்கு மிகவும் எளிதில் கிடைக்கும்படிச் செய்கிறேன், விட்டுவிடாதீர்கள்
உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் எப்படி விண் செலுத்த வேண்டும்?
அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் ஒரு 48 நாட்களுக்கு காலையில் 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணி தியானிக்க வேண்டும்.
தியானித்துவிட்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் செலுத்தி உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ளுதல் வேண்டும்.
அவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் தியானித்து உந்தித் தள்ளினால் அவர்கள் ஒளியின் சரீரம் பெறுகின்றார்கள். பின், அவர்கள் ஒளியான உணர்வுகள் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து எளிதில் பெற ஏதுவாகின்றது.
உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் நம் உடலில் இருந்தாலும் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் உணர்வை எளிதில் நுகர்ந்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த உதவும்.
ஆகவே, அந்த உணர்வின் வலுவை நாம் பெற்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். ஏனென்றால் மனிதனின் கடைசி எல்லை.
தேடிய செல்வமும் சொத்தும் எவ்வளவு தான் சேர்த்து வைத்திருந்தாலும் இந்த உடலை விட்டுப் பிரிந்தபின் என்ன கொண்டு போகப் போகிறோம்?
எப்பொழுதுமே உயிருடன் ஒன்றி அந்த அருள் உணர்வைப் பெற்றோம் என்றால் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் சென்றடைகின்றோம்.
அதைப் பெறுவதற்காகத்தான் ஞானிகள் அத்தனை வேலையும் செய்தார்கள். உங்களுக்குச் சுலபமாகக் கிடைக்கின்றது என்று விட்டுவிடாதீர்கள்.
ஏனென்றால், மிகவும் கடினமாக்கிக் கொடுத்திருந்தார்கள். நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி மிகவும் எளிதில் கிடைக்கும்படிச் செய்கின்றேன்.
அந்த ஞானிகள் காட்டிய அந்த அகஸ்தியன் வழியில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதைப் பின் தொடர்ந்தால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீங்கள் அகற்றலாம்.
இந்த வாழ்க்கையில் தெளிந்த மனதுடன் வாழலாம். இந்த உடலுக்குப் பின் அனைவரும் பிறவியில்லா நிலை அடையலாம். எமது அருளாசிகள்.
13 குரு காட்டிய வழியினைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்கு யாம் செய்வது என்ன?
குடும்பத்தில் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால், அவன் சந்தரப்பம் நோய்வாய்ப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.
அதனால் அவன் வேதனைப்படுகின்றான். குழந்தை வேதனைப்படுவதைப் பார்த்து நாமும் அதைச் சுவாசித்து வேதனைப்படுகின்றோம். வேதனைப்பட்டு அழுகின்றோமே தவிர வேதனையை நீக்கும் உபாயம் இல்லை.
மருந்தைக் கொடுக்கலாம், காசைக் கொடுக்கலாம், ஆனால் முழுமைக்கும் வேதனைப்படுகின்றோம்.
அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடலில் இருளை நீக்கும் அருள் சக்தி பெறவேண்டும். அதே போன்று குழந்தையும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்,
அறியாது சேர்ந்த அந்த இருள் நீங்கி அவன் தெளிவான நிலைகளில் வரவேண்டும் என்று நீங்கள் அந்த உணர்வலைகளைக் கொஞ்சம் பாய்ச்சிப் பாருங்கள்.
இப்படிச் செய்தால் அது உங்களைக் காக்கும். குழந்தையையும் காக்கும். இந்த நிலைக்கு வரவில்லை என்றால் அது உங்களுடைய இஷ்டம்.
குருநாதர் காட்டிய நிலையில் காடு மேடெல்லாம் சுற்றினேன், கஷ்டப்பட்டேன். அந்த அருள் மகரிஷிகளின் ஆற்றல்களையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.
அந்த ஆசை நிறைவேறும் என்ற நிலைகளில்தான் கூடுமான வரையிலும் நான் நேரம் காலம் பார்க்காமல் உபதேசித்து வருகிறேன். மற்ற மார்க்கங்களிலோ மற்றவர்களோ இந்த நேரத்திற்குத்தான் வரவேண்டும், அப்பொழுதுதான் பார்க்க முடியும் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால், நீங்கள் எந்த நேரத்தில் கேட்டாலும் ஆறுதல் சொல்லக்கூடிய அளவிற்கு அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.
அப்படி ஏற்படுத்தினாலும், அதைக் கேட்பார் இல்லை. “தலை வலியும் மேல் வலியும்” தான் நான் கேட்க வேண்டியுள்ளது.
எனக்குப் பிழைப்பதற்கு “ஒரு நல்ல உபாயம் வேண்டும், அந்த அருள் கொடுங்கள்.., அந்த ஞான சக்தி கொடுங்கள்..,” என்று கேட்பார் யாரும் இல்லை. நீங்களே எண்ணி நீங்களே தான் வளர்க்க முடியும்.
ஆகவே, வேதனையையும், நோயையும் வளர்ப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்க வேண்டாம்.
அதனால் தான் நீங்கள் எந்நேரம் வந்தாலும் அந்த அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம் என்று சொன்னால் அதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் எனக்கும் அந்த வேதனயைத் தான் தூண்டுகின்றீர்கள்.
வேதனையை நீக்குவதற்கு மணிக்கணக்கில் நான் இப்படி உபதேசிக்கின்றேன். அதை எடுக்க வேண்டுமா இல்லையா..?
ஒரு நாளைக்கு எனக்கு என்று ஒரு நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. தினசரி வாழ்க்கையில் எப்படி நாம் உடுத்தும் துணிகளில் உள்ள அழுக்கை சோப்பைப் போட்டு வெளியேற்றுகின்றோமோ அதே மாதிரி “பல மகரிஷிகளின் அருளை..,” நான் எடுக்கின்றேன்.
அந்த மகரிஷிகள் எதெனதன் வழிகளில் எடுத்தார்களோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து என் ஆத்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றேன்.
இல்லாமல் போனால் உங்களை மாதிரி என் உடலில் பல நோய் வரும். ஏமாந்தேன் என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரி சர்க்கஸில் விளையாடுகிற மாதிரி பிறருடைய உணர்வு அதிகமாகிவிட்டால் அவர்களின் உணர்வுகள் என்னைத் தாக்கத்தான் செய்யும்.
இதே போல நான் சொன்னபடி கேட்டு வழி நடக்கும் மற்ற தியானவழி அன்பர்கள் அருள் வழியில் பெற வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அவர்கள் போகும்போது அவர்களிடமும் இதே போன்று கஷ்டம், வேதனை என்று சொல்கின்றார்கள்.
தியான வழி அன்பர்கள் இத்தகைய நிலையைச் சந்திக்கும் நிலையில் “அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்ற நிலையில் நான் அந்த மகரிஷிகளின் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.
இல்லையென்றால், நானே இப்படி இருக்கின்றேன் என்றால் அவர்களுடைய நிலை எப்படி இருக்கும்? அவர்களையும் காக்கப்பட வேண்டும் நல்லதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வைக்க வேண்டும், நல்லதை அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தியான வழி அன்பர்கள் இதைப் பெறவேண்டும் என்று ஊக்கத்தை நான் கொடுக்கின்றேன்.
ஆர்வத்துடன் அவர்கள் மற்றவர்களுக்கு நல்லதைச் சொல்லும் நிலையில் கஷ்டத்தையெல்லாம் அவர்களிடமும் சொல்லும்போது என்ன ஆகும்?
ஆக, அவர்களைக் காப்பாற்றுவதற்கு நான் அதைச் செய்யவில்லை என்றால் தியான வழி அன்பர்களும் இரண்டு நாள் சொல்லிவிட்டு பின் சோர்வடைந்துவிடுவார்கள்.
நல்லது செய்யவேண்டும் என்று எண்ணினால் அந்த வலுவை அவர்களுக்குக் கொடுத்து அவர்களுக்காக வேண்டிப் பிரார்த்தனை செய்து யாம் அந்த வலுவை ஏற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.
குருநாதர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிக்கும்போது எனக்கு குருநாதர் “எப்படிப் பாதுகாப்பு கொடுத்தாரோ..,” அந்த நிலையில்தான் யாமும் செயல்படுகின்றோம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியினை நீங்கள் கடைப்பிடியுங்கள். அவருடைய துணை கொண்டு எல்லா மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். தீமைகளிலிருந்து விடுபடும் பேராற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள். பெற்ற அருள் சக்திகளை எல்லோரும் பெறவேண்டும் என்று தவமிருங்கள், அந்த உணர்வை உங்ககள் மூச்சலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்.
அதன் வழி நடந்தால் விண்ணும் மண்ணும் போற்றக் கூடிய நிலையில் அந்த மாமகரிஷிகளைப் போன்று ஆவீர்கள். எமது அருளாசிகள்.